Wednesday, May 3, 2023

குறுந்தொகை 2 - நீ அறியும் பூவே

குறிஞ்சி - தலைவன் கூற்று
 
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயில் இயல்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.
 
-இறையனார்
 
கொங்கு - தேன். தேர்தல் - ஆராய்தல். அஞ்சிறை - அழகிய சிறகு. தும்பி - வண்டு. காமம் - விருப்பம். பயில்தல் – பழகுதல். எயிறு - பல். நறுமை – நறுமணம்.
 
தேன் சேகரித்து வாழும்
அழகிய சிறகுகளுடைய வண்டே!
என்னை மகிழ்விக்க பொய்யாகக் கூறாமல்
நீ கண்டதைச் சொல்.
என்னோடு நெருங்கிப் பழகி நட்பு கொண்ட
மயில் போன்ற சாயலும்
செறிந்த பற்களுமுடைய
இப்பெண்ணின் கூந்தலை விட
மணம் மிக்கது உண்டோ?
நீ அறிந்த பூ எதுவும்.
 
தருமிக்குப் பொற்கிழி பெற்றுத் தருவதற்காக, ஈசன் இப்பாடலை இயற்றியதாக, திருவிளையாடல் புராணம் கூறுகிறது. பாடல் இயற்றிய புலவர் பெயரை ஒப்பு நோக்குக.

No comments:

Post a Comment