Friday, May 12, 2023

குறுந்தொகை 123 - என்னையர் திமில்

நெய்தல் - தோழி கூற்று

இருள் திணிந்தன்ன ஈர்ந் தண் கொழு நிழல்
நிலவுக் குவித்தன்ன வெண்மணல் ஒரு சிறைக்
கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப
இன்னும் வாரார் வரூஉம்
பன்மீன் வேட்டத்து என்னையர் திமிலே.

-ஐயூர் முடவனார்

திணிந்த - செறிந்த. ஈர் - ஈரமான. தண் - குளிர்ச்சி. சிறை - பக்கம். கோடு - கிளை. புலம்பு - தனிமை. என்னையர் - என் + ஐயர்  - என் தமையன்மார். திமில் - படகு.

கடற்கரையில் சந்திக்கக் குறிந்திருந்த இடத்தில், தலைவனுக்காகக் காத்திருந்து, அவன் வரத் தாமதம் ஆனபோது, தோழி சொன்னது.

இருள் செறிந்த ஈரமான, குளிர் நிழல்.
நிலவைக் குவித்தது போன்ற வெண்மணல் கடற்கரை.
கருங்கிளைப் புன்னை மரச்சோலை.
அங்கு ஒரு மூலையில்
தனிமையில் காத்திருக்கிறோம்.
இன்னும் வாரார் தலைவர்.
வந்துவிடும்,
பலவகை மீன்களை வேட்டையாடச் சென்ற
நம் தமையன்மார்களின் படகு.

No comments:

Post a Comment