குறிஞ்சி - தலைவி கூற்று
சிறை பனி உடைந்த சேயரி மழைக் கண்
பொறையரு நோயொடு புலம்பு அலைக் கலங்கி
பிறரும் கேட்குநர் உளர்கொல் உறை சிறந்து
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து
ஆன் நுளம்பு உலம்புதொரு உளம்பும்
நா நவில் கொடுமணி நல்கூர் குரலே.
-வெண்கொற்றனார்
பனி - கண்ணீர்த் துளி. சேயரி - சிவந்த வரி. மழை - குளிர்ச்சி. பொறை - பொறுத்தல். புலம்பு - தனிமை. உறை - மழைத்துளி. ஊதை – வாடைக்காற்று. கூதிர் - கூதிர் காலம். ஆன் - எருது. நுளம்பு - ஈ. உலம்புதல் - சப்தமிடுதல். உளம்பு - அலைதல். நா - மணியின் நாக்கு. நவில்தல் - ஒலித்தல். நல்கூர் - மெல்லிய.
தலைவனின் பிரிவால் வருந்திய தலைவி சொன்னது.
சிறைப்பட்ட கண்ணீர் உடைந்து உதிரும்
சிவந்த வரி, குளிர்க் கண்கள்.
பொறுக்கமுடியாத காதல் நோயோடு
தனிமைத் துயரால் கலக்கம்.
என்னைத் தவிர
கேட்பவர் வேறெவரும் உள்ளனரோ?
மழைத்துளி தூறும்
ஊதைக் காற்று வீசும்
இந்த கூதிர் கால நள்ளிரவில்,
தொழுவத்தில்
ஈ ரீங்கரிக்கும் போதெல்லாம்,
எருது தலையை அசைப்பதால் ஆடுகின்ற
கழுத்து மணியின் நாக்கு எழுப்பும்
மெல்லிய ஒலியை.
Saturday, May 6, 2023
குறுந்தொகை 86 - கொடுமணி நல்கூர் குரலே
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment