Saturday, May 6, 2023

குறுந்தொகை 77 - உலந்த வம்பலர் பதுக்கை

பாலை - தலைவி கூற்று

அம்ம வாழி தோழி யாவதும்
தவறு எனின் தவறோ இலவே வெஞ்சுரத்து
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை
நெடுநல் யானைக்கு இடு நிழலாகும்
அரிய கானம் சென்றோர்க்கு
எளிய ஆகிய தடமென் தோளே.

-மதுரை மருதன் இளநாகனார்

யாவதும் - சிறிதும். சுரம் - பாலைநிலம். உலந்த - இறந்த. வம்பலர் - வழிப்போக்கர். உவல் - தழை. பதுக்கை - குவியல். எளியவாதல் - மெலிதல். தடம் - பெருமை.

தலைவன் பொருளீட்டப் போயிருக்க, பிரிவால் வருந்திய தலைவியின் தோள்கள் மெலிந்திருப்பதைச் சுட்டிக்காட்டி ஆறுதல் கூறிய தோழிக்கு, தலைவி சொன்னது.

தோழி!
தவறோ என்று கேட்பின்,
தவறு ஒன்றும் இல்லை.
வெம்மையான பாலை நிலத்தில்
தாம் கொன்ற வழிப்போக்கர் உடல்களை
கள்வர்கள் தழைகள் கொண்டு மூடி வைத்த குவியல்
பெரிய யானைக்கு நிழலாக விளங்கும்
கொடிய பாதையில் சென்றவர்க்காக
மெலிந்தன
என் மென்மையான தோள்கள்.

பதுக்கை - பாலைநிலத்தைக் கடந்து செல்லும் வழிப்போக்கர்களைக் கள்வர்கள் கொன்று, உடல்களைக் கற்கள், தழைகள் கொண்டு குவியலாக மூடி வைப்பர் என்பது மரபு.

No comments:

Post a Comment