Saturday, May 6, 2023

குறுந்தொகை 80 - பல்வேல் எழினி

மருதம் - பரத்தை கூற்று

கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சிப்
பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி
யாம் அஃது அயர்கம் சேறும் தான் அஃது
அஞ்சுவது உடையள் ஆயின் வெம்போர்
நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி
முனை ஆன் பெருநிரை போலக்
கிளையொடுங் காக்க தன் கொழுநன் மார்பே.

-ஒளவையார்
 
முழு நெறி - முழுப்பூ. அடைச்சி - செருகி. பெரும்புனல் - வெள்ளம். துறை – நீர்த்துறை. அயர்கம் - விளையாட்டு. நுகம் - வலிமை. கடக்கும் - வெல்லும். முனை - போர்முனை. ஆன் - பசு. நிரை – கூட்டம். கிளை - உறவினர். கொழுநன் – கணவன்.

தலைவியைப் பிரிந்து பரத்தையோடு தலைவன் இருக்குங்கால், தலைவி தன்னை இகழ்ந்தாள் எனக் கேள்விப்பட்ட பரத்தை கூறியது.

கூந்தலில் முழு ஆம்பல் பூவினைச் செருகி
வெள்ளம் வந்த நீர்த்துறைக்கு
தலைவனோடு விளையாடப் போகின்றோம்.
அது கண்டு தலைவி அஞ்சுவாள் ஆயின்,
போர்க்களத்தில் வலிமையோடு வெல்லும்
வேற்படை கொண்ட எழினி
போர்முனையில் தன் பசுக்கூட்டத்தை மீட்டதைப் போல,
சுற்றத்தோடு வந்து மீட்டுக் கொள்ளட்டும்
தன் கணவனின் மார்பை.

எழினி - ஒரு மன்னன். இவன் தன் பசுக்கூட்டத்தை பகைவரிடமிருந்து மீட்டதை மற்ற சங்க நூல்களும் குறிப்பிடுகின்றன.

No comments:

Post a Comment