பாலை - செவிலித்தாய் கூற்று
பறை படப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொல் மூது ஆலத்துப் பொதியில் தோன்றிய
நாலூர்க் கோசர் நல் மொழி போல,
வாய் ஆகின்றே தோழி! ஆய் கழல்
சேயிலை வெள் வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே.
-ஒளவையார்
பணிலம் - சங்கு. ஆர்த்தல் - ஒலித்தல். இறைகொள்பு - தங்குதல்.
மூது - முதிய. ஆலம் - ஆலமரம். பொதி - பொதுச்சபை. வாய் - வாய்மை. ஆய் - அழகிய. சேயிலை
- செம்மையான இலை.
பெற்றோர் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாததால், தலைவனும், தலைவியும்
உடன்போகி, பறை-சங்கு ஒலிக்க திருமணமும் நடந்து விட்டது என்ற செய்தியை வெளிப்படுத்தி,
தலைவி குறித்து வருந்த வேண்டாம் என்று, பெற்ற தாய்க்கு செவிலித்தாய் அறிவுறுத்தியது.
பறை அதிர, சங்கு முழங்க,
தொன்மையான ஆல மரத்தடிப் பொதுச்சபையில்
நாலூர்க் கோசர்கள் கொடுக்கும் வாக்கு போல,
பலித்து விட்டது தோழி!
அழகிய கழல்கள் அணிந்த
செம்மையான, இலைவடிவ
வெண்ணிற வேல் பிடித்த இளைஞனோடு
முன்கையில் வளையல்கள் அணிந்த
பெண்ணின் காதல்.
நாலூர்க் கோசர் - வாக்கு தவறாத ஒரு வீர மரபினர்.

No comments:
Post a Comment