Saturday, May 6, 2023

குறுந்தொகை 51 - அம்பல் ஊரும் அவனொடு மொழிமே

நெய்தல் - தோழி கூற்று

கூன் முள் முண்டகக் கூர்ம் பனி மா மலர்
நூல் அறு முத்தின் காலொடு பாறித்
துறைதொறும் பரக்கும் தூ மணற் சேர்ப்பனை
யானும் காதலென் யாயும் நனி வெய்யள்
எந்தையும் கொடீஇயர் வேண்டும்
அம்பல் ஊரும் அவனொடு மொழிமே.
 
-குன்றியனார்.
 
கூன் - வளைந்த. முண்டகம் - முள்ளிச்செடி. கூர் – மிகுதி. பனி - குளிர்ச்சி. மா - கருமை. கால் - காற்று. பாறி - சிதறி. துறை – கடற்கரை. தூ – தூய. சேர்ப்பன் - நெய்தல் தலைவன். யாய் - தாய். நனி - மிகவும். வெய் - விருப்பம். எந்தை - எம் தந்தை. கொடீஇயர் - கொடுத்தல். அம்பல் - வதந்தி.
 
அவள் விரும்பிய தலைவனுடனேயே விரைவில் திருமணம் நடக்கும் என்று, தலைவிக்கு தோழி சொன்னது.
 
வளைந்த முள்ளுடைய முள்ளிச்செடியின் கருமலர்கள்
நூலறுந்த மாலையின் முத்துக்கள் போல
காற்றில் சிதறி, கடற்கரையில் பரவிக் கிடக்கும்
நெய்தல் நிலத்துத் தலைவனை
எனக்கும் பிடித்திருக்கிறது.
உன் தாய்க்கு மிகவும் பிடித்திருக்கிறது.
உன் தந்தைக்கும் பெண் கொடுக்க விருப்பம்.
வம்பு பேசும் இவ்வூரும்
உன்னை அவனோடு இணைத்துப் பேசுகிறது.

No comments:

Post a Comment