Tuesday, May 30, 2023

குறுந்தொகை 240 - மாலை மறையும் மணிநெடுங்குன்று

முல்லை - தலைவி கூற்று

பனிப் புதல் இவர்ந்த பைங்கொடி அவரைக்
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பல் மலர்
வெருக்குப் பல் உருவின் முல்லையொடு கஞலி
வாடை வந்ததன் தலையும் நோய் பொரக்
கண்டிசின் வாழி தோழி தெண் திரைக்
கடல் ஆழ் கலத்தின் தோன்றி
மாலை மறையும் அவர் மணி நெடுங் குன்றே.

- கொல்லன் அழிசியார்.

பனி - குளிர்ந்த. புதல் - புதர். இவர்தல் - படர்தல். வெருகு - காட்டுப்பூனை. கஞலி - நிறைந்து. வாடை – வாடைக்காலம். தலையும் - பிறகும். பொருதல் - அலைமோதுதல். கலம் - கப்பல்.

தலைவன் கார் காலத்தே திரும்பி வருவதாகச் சொல்லிவிட்டுப் பொருள் தேடிச் சென்றிருக்க, கார் காலம் முடிந்து வாடைக் காலம் தொடங்கியும், அவன் வரத் தாமதம் ஆனபோது, தோழியிடம் தலைவி சொன்னது.

குளிர்ந்த புதரில் படர்ந்த அவரைக் கொடியில்
கிளிவாய் போன்ற ஒளி வீசும் மலர்கள் பூத்தன.
முல்லைக்கொடியில்
காட்டுப்பூனையின் பல் போன்ற பூக்கள் நிறைந்தன.
வாடைக்காலமும் வந்தது.
நெஞ்சில் துயரம் அலைமோதுகிறது.
காண்பாய் தோழி!
கடலில் மறையும் கப்பல் போல,
மாலைப் பொழுது வந்ததும் மறைகிறது
அவர் கடந்து சென்ற
மணிநெடுங் குன்று.

No comments:

Post a Comment