மருதம் - காதற் பரத்தை கூற்று
கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம் இல் பெருமொழி கூறித் தம் இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே.
-ஆலங்குடி வங்கனார்
கழனி - வயல். மா - மாமரம். உகுதல் - உதிர்தல். தீம்பழம் - இனிய பழம். பழனம் - நீர்நிலை. கதுவுதல் - கவ்வுதல். இல் - இல்லம். ஆடி - கண்ணாடி. பாவை - உருவம். மேவுதல் – ஆசைப்படுதல்.
தலைவி தன்னைப் பழித்துப் பேசினாள் என்பதைக் கேள்விப்பட்ட, காதல் பரத்தை கூறியது.
வயலோர மாமரத்தில் இருந்து
பழுத்து விழுந்த இனிய பழத்தை
பொய்கையில் நீந்தும் வாளைமீன் தாவிக் கவ்வும்
ஊர்க்காரன்.
எம் இல்லத்தில்
மயக்கும் பெரிய பேச்சுகள் பேசிவிட்டு,
தம் இல்லத்தில்,
எதிரில் உள்ளோர் கையும் காலும் தூக்க
தானும் அதுபோலவே தூக்கும்
கண்ணாடி உருவம் போல,
கேட்டதை எல்லாம் செய்வான்,
தன் புதல்வனின் தாய்க்கு.
காதல் பரத்தை - தலைவனிடம் காதல் கொண்டு, அவனை மட்டும் சார்ந்திருக்கும்,
பரத்தையர் குலத்தில் பிறந்த பெண். உள்ளுறை - வாளை உண்ட பழம், மரத்திலிருந்து அதுவாக
உதிர்ந்ததைப் போல, தன் முயற்சி ஏதுமின்றி, தலைவன் அவனாகக் காதல் கொண்டான் என்கிறாள்.

No comments:
Post a Comment