Friday, May 26, 2023

குறுந்தொகை 201 - அமிழ்தம் உண்க

குறிஞ்சி - தலைவி கூற்று

அமிழ்தம் உண்க நம் அயல் இல் ஆட்டி
பால் கலப்பன்ன தேக் கொக்கு அருந்துபு
நீல மென் சிறை வள் உகிர்ப் பறவை
நெல்லி அம் புளி மாந்தி அயலது
முள் இல் அம் பணை மூங்கில் தூங்கும்
கழை நிவந்து ஓங்கிய சோலை
மலைகெழு நாடனை வரும் என்றாளே.

-பெயர் தெரியவில்லை

இல் - இல்லம். ஆட்டி - பெண்.  கொக்கு - மாம்பழம். சிறை - சிறகு. வள் - கூரிய. உகிர் - நகம். வள் உகிர்ப் பறவை - வௌவால். மாந்துதல் - உண்ணுதல். பணை - பருத்த. கழை - மூங்கில். நிவந்த - ஓங்கிய.

அமிழ்தம் உண்க!
நம் அயல் வீட்டுப் பெண்.
பால் கலந்தது போன்ற இனிய மாம்பழத்தை உண்ட
நீல மென் சிறகும், கூர்நகமும் கொண்ட வெளவால்
புளிப்பான நெல்லிக்காயைத் தின்று விட்டு
பருத்த, முள்ளில்லா மூங்கிலில் தூங்கும்.
அப்படிப்பட்ட மூங்கில் சோலைகள் உயர்ந்தோங்கிய
மலை நாட்டினைச் சேர்ந்த தலைவன்
(திருமணம் செய்ய)
வரப் போகிறான் என்றாளே.

No comments:

Post a Comment