குறுந்தொகை - தற்காலத் தமிழில்


சங்க இலக்கிய நூல்களுள் ஏதேனுமொன்றை முழுவதுமாகப் படிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. கைக்கடக்கமான பாடல்களைக் கொண்டது என்பதால் குறுந்தொகையைத் தேர்ந்தெடுத்து, உரைகளின் துணையோடு படித்து வரும்போது, சில பாடல்களை தற்காலத் தமிழில், சொந்த வார்த்தைகளால் எழுதினால், பாடல்களின் கவியுணர்வு பிடிபடும் என்ற விபரீத எண்ணம் தோன்றியது. அதன் விளைவாக, பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவ்வப்போது ஃபேஸ்புக் பதிவுகளாக எழுதி வந்தேன். அவை இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

இப்பதிவுகள் மூன்று தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, அதாவது உல்ட்டா செய்து, எழுதப்பட்டன. 

குறுந்தொகைக்கு பழைய உரை ஒன்று இருந்துள்ளது. பேராசிரியர் முந்நூற்று எண்பது பாடல்களுக்கு உரை எழுதி, அது என்ன காரணத்தினாலோ நின்று போக, எஞ்சிய இருபது பாடல்களுக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதி பூர்த்தி செய்துள்ளார். சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு போன்ற நூல்களைப் பதிப்பித்த உ.வே.சா, இந்த உரையுடன் சேர்த்து குறுந்தொகையைப் பதிப்பிக்கும் பொருட்டு, நீண்ட காலம் தேடி வந்தார். தமது முதிய வயதில், இனி கிடைக்காது என்ற முடிவு செய்து, மற்ற நூல்களைப் பதிப்பிக்கும் போது சேகரித்து வைத்திருந்த குறிப்புகளின் துணையோடு, தாமே உரை எழுதி வெளியிட்டார். துல்லியமான பொருள், மற்ற நூல்களோடு ஒப்புமை என்று விரிவாக எழுதப்பட்ட உரை இது. பிறகு எழுந்த உரைகளுக்கு அவரது உரையே அடிப்படை எனலாம்.

முனைவர் பிரபாகரன் கணித வல்லுநர். கணிணித் துறையில் முனைவர் பட்டம் பெற்று நாசா நிறுவனத்தில் பணியாற்றியவர். தமிழ் இலக்கியங்கள் மீது பற்று கொண்டவர். இவர் தமது வலைப்பக்கத்தில், குறுந்தொகைக்கு எளிய தமிழில் உரை எழுதி உள்ளார். பாடியவர் பற்றிய குறிப்பு, துறை விளக்கம், அருஞ்சொற்பொருள் ஆகியவற்றுடன், பாடலைப் பதம் பிரித்து, கொண்டுகூட்டி, அதன் அடைப்படையில்  விளக்கம்,  மேலதிகக் குறிப்புகள் என்ற வகையில் மிகச் சிறப்பாக அமைந்தது. பாடல்களின் பொருளை அறிவதற்கு, எனக்கு அவரது உரையே பெரிதும் உதவியது. தேவைப்பட்ட நேரங்களில், உவேசா அவர்களின் உரையையும் சேர்த்துப் படித்தேன்.

சுஜாதா குறுந்தொகையை ஒரு புதிய கோணத்தில் அணுகுகிறார். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்  படைக்கப்பட்ட நூல் இது. சூழ்நிலை பல வகைகளில் மாறியிருக்கிறது. எனினும், இப்பாடல்களின் மைய உணர்வுகளான "காதலின் கூடலும், பிரிவும், துரோகமும், கண்ணீரும்" இக்காலத்திற்கும் பொருந்துபவை.  இவ்வகையில், "இன்று தமிழில் எழுதப்படும் அனைத்து காதல் கவிதைகளும் குறுந்தொகையில் இருந்து பிறந்தவை" என்று அவர் கூறுவது பொருத்தமானது. இந்த அடிப்படையில், குறுந்தொகையை "ஆஸ்பத்திரி சுத்தத்துடன் அணுகாமல், நவீன கவிதைத் தொகுப்பாக பார்க்க வைக்கும்" நோக்கத்தில் எழுதப்பட்டது அவரது நூல். நீண்ட விளக்கங்களைத் தவிர்த்து விட்டு,  பாடல்களை எளிமைப்படுத்தி, கவிதை வடிவில் தருகிறார். அதன் மூலம், பாடல்களின் மைய உணர்வை சுலபமாக அறிய முடிகிறது.

ஆனால், இந்த எளிமைப்படுத்தலில் சில குறைபாடுகள் உள்ளன. குறுந்தொகைப் பாடல்கள் அடர்த்தியான, அடுக்கடுக்கான வர்ணனைகள் கொண்டவை. எளிமையைக் காரணம் காட்டி, சுஜாதா இத்தகு வர்ணனைகளை வெட்டி விடுகிறார். உதாரணமாக, 155-ஆம் பாடல், மாலைப் பொழுது வந்தது என்பதை, "முதைப் புனம் கொன்ற ஆர்கலி உழவர் விதைக் குறுவட்டி போதொடு பொதுளப் பொழுதோ தான் வந்தன்றே" என்று விவரிக்கிறது. "முதிய வயலை உழுத ஆரவாரம் மிக்க உழவர்கள் காலையில் விதைகள் கொண்டு சென்ற சிறு கூடையில், மலர்கள் நிறைத்து வீடு திரும்பும் மாலைப் பொழுது வந்தது" என்று பொருள்.  சுஜாதா இந்த வரிகளை, "உழவர்கள் விதைத்து விட்டுத் திரும்பி விட்டனர். மாலைப் பொழுது வந்து விட்டது." எனச் சுருக்கிவிடுகிறார். இப்படிச் செய்வது, வாசிப்பை சுலபமாக்கினாலும், பாடலின் அடர்த்தியும், அழகும் குலைந்து விடுகின்றன. மேலும், பாடலை முழுவதுமாகப் பொருள் கொள்வது கடினம்.

எனது பதிவுகள் சுஜாதாவின் நூலையே முன்மாதிரியாகக் கொண்டு, அவரது பாதையிலேயே பயணிப்பவை. ஆனால், பாடல்களின் மைய உணர்வு என்பதைத் தாண்டி, மூலப் பாடல்களையே நேரடியாக நவீன கவிதைகளாக வாசிக்க ஆசைப்படுபவை. அதற்குத் துணை செய்யும் நோக்கத்தோடு, மூலத்திற்கு நெருக்கமாக, "கவிதை" நடையில் மொழியாக்கம் தருபவை. அவ்வகையில், அவரது பாணியில், மேலும் சில நியதிகளை சேர்த்துக்கொண்டேன்.
    
முடிந்தவரை, கொண்டுகூட்டிப் பொருள் கொள்ளாமல், பதிவின் வரிகளை மூலத்தின் வரிசையிலேயே அமைத்துள்ளேன். பல சமயங்களில், ஒரு பாடலின் "பன்ச்" அதன் கடைசி  வார்த்தைகளில் அமைந்திருக்கும். பதிவில் அது சிதையாமல் இருக்க முயன்றுள்ளேன். வர்ணனைகள், உரிச்சொற்கள் ஆகியவற்றை வெட்டிவிடாமல் சேர்த்துள்ளேன். தேவைப்படும் இடங்களில், துறை விளக்கம் போல, பாடலின் சூழலைச் சுருக்கமாகத் தந்துள்ளேன். மேலும், அருஞ்சொற்பொருள் சேர்த்துள்ளேன் (இவை பெரும்பாலும் பிரபாகரனின் உரையில் இருந்து பிரதி எடுக்கப்பட்டவை).

தொகுப்பிற்கான பாடல்களை, எனக்குப் பிடித்தவை, வரலாற்றுக் குறிப்புகள் கொண்டவை, பல வகைப்பட்ட பாடல்களுக்கு மாதிரி காட்டுவது ஆகிய காரணிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுத்தேன். மூலம், அருஞ்சொற்பொருள், சூழல் விளக்கம், மொழியாக்கம் ஆகியவற்றை திரும்ப, திரும்ப சில முறை படித்த பின், மூலத்தையே நேரடியாக நவீன கவிதையாக வாசிக்க முடிய வேண்டும் என்பதே நோக்கம். இது சில பாடல்களிலாவது கைகூடி இருந்தால் மகிழ்ச்சி.

எகிப்தியர்கள் வானளாவும் பிரமிடுகள் கட்டினார்கள். பழந்தமிழரின் பெருமை என்ன என்று கேட்கப்படுவதுண்டு. இதற்கு மறுமொழியாக, தாராளமாக குறுந்தொகையை தூக்கி நீட்டலாம் என்று தோன்றுகிறது. திணை, துறை, மாந்தர்கள், யாப்பு எனப் பல்வேறு  சட்டங்கள் விதித்து, மிகக் குறுகிய வட்டம் போட்ட பின்பும், அதற்குள் நின்று பட்டுத் தெரிக்கும் பாடல்கள் இவை. வர்ணனைகளை விரிவாக வைத்து, மைய உணர்வை நுண்மையாகச்   சொல்பவை. உதாரணமாக, 242-ஆம் பாடல்.  

கானங்கோழிக் கவர்குரல் சேவல்
ஒண்பொறி எருத்தின் தண்சிதர் உறைப்பப்
புதல் நீர் வாரும் பூ நாறு புறவில்
சீறூரோளே மடந்தை வேறு ஊர்
வேந்து விடு தொழிலோடு செலினும்
சேந்து வரல் அறியாது செம்மல் தேரே.

தலைவிக்குத் திருமணம் முடிந்த பின், அவள் வீட்டுக்குச் சென்று வந்த செவிலித்தாய், பெற்ற அன்னையிடம் சொல்லியது.

காட்டுக்கோழிகள் பல சேர்ந்து
ஒன்றாய் ஒலித்தது போன்ற குரலுடைய சேவல்.
அதன் ஒளிரும் புள்ளிகள் கொண்ட கழுத்தின் மேல்
குளிர்ந்த நீர்த்துளிகள் சொட்டித் தெறிக்கும்படி
புதரில் இருந்து நீர் ஒழுகும்
பூமணம் வீசும் முல்லை நிலம்.
அங்கு ஒரு சிறிய ஊரில் வாழ்கிறாள் அவள்.
அயல் ஊருக்கு
அரசனிட்ட பணியைச் செய்யச் சென்றால் கூட
இரவு தங்கி மறுநாள் வருவது
என்பதை அறியாதது
தலைவனின் தேர்.

திருமணமாகிப் போன மகள் எப்படி இருக்கிறாள் என்ற கலக்கத்தில் உள்ள பெற்ற தாய்க்கு, அவள் நலமாக வாழ்கிறாள் என்பதை, சென்று பார்த்து வந்த செவிலித்தாய் உணர்த்துவதே பாடலின் மையம். சேவல், அதன் குரல், கழுத்து, நீர் ஒழுகும் புதர் என முல்லை நிலத்தை விரிவாக வர்ணிக்கிறது பாடல்.  ஆனால்,  மைய உணர்வு என்று வரும்போது,  நீட்டி முழக்காமல், "சேந்து வரல் அறியாது செம்மல் தேரே" என அழகாக முடித்துக் கொள்கிறது.

எனது பதிவுகளில், விளக்கங்கள் இல்லாமல், வெறும் மொழியாக்கம் மட்டும் தருவதில், எனது மொழித்திறமைக் குறைபாடு காரணமாக, பாடல் புரியாமலே போய் விடும் சிக்கல் உள்ளது . இதை நிவர்த்தி செய்யும் முயற்சியில், பத்மா பெரிதும் உதவினாள். பரிசோதனை எலியாக, ஒவ்வொரு பதிவையும் படித்துப் பார்த்து, புரிதலை மேம்படுத்த  ஆலேசனைகள் கூறினாள். அவளுக்கு என் அன்பு முத்தங்கள்.

பேராசியர், நச்சினார்க்கினியர், உவேசா எனத் தோலா நாவின் மேலோர் பலர் உரை எழுதிய குறுந்தொகைப் பாடல்களை, தற்காலத் தமிழில் மொழியாக்கம் செய்வோம் என்று துணிந்த இம்மூடனின் கீழ்மையை, அம்மேலோரின் மேன்மையை எண்ணிப் பொறுத்தருளுமாறு வந்திக்கின்றேன்.

நூல் வடிவில்

இப்பதிவுகளை நூலாகத் தொகுத்துள்ளேன். அது pdf முறையில் கீழே உள்ள சுட்டியில் தரவிறக்கம் செய்யலாம். இவ்வாறு தொகுக்கும்போது நிவேதிதா உடனிருந்து உற்சாகமூட்டினாள். அவளுக்கு நிறைய சாக்லேட்டுகள் கிடைப்பதாக. 

வலைப்பக்க முகப்பு ஓவியம்: டி  சி நந்தினி


No comments:

Post a Comment