Thursday, June 1, 2023

குறுந்தொகை 376 - சிறு வெம்மையளே

நெய்தல் - தலைவன் கூற்று

மன் உயிர் அறியாத் துன்னரும் பொதியில்
சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப
வேனிலானே தண்ணியள் பனியே
வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி ஐயென
அலங்கு வெயிற் பொதிந்த தாமரை
உள்ளகத்து அன்ன சிறு வெம்மையளே.

-படுமரத்து மோசிக்கொற்றனார்.

துன்னுதல் - நெருங்குதல். பொதி - பொதிய மலை.  சூர் - தெய்வம். அடுக்கம் - மலைப்பக்கம். பொதி - பொதிகை மலை. ஆரம் - சந்தனம். கடுப்ப - போல. வேனில் - கோடைக்காலம். பனி - பனிக்காலம். தண் - குளிர்ச்சி. ஐ - அழகு. அலங்கு - அசையும்.

உலகினில் வாழும் உயிர்கள் அறிய இயலாத,
நெருங்க முடியாத பொதிகை மலையின்
தெய்வங்கள் உறையும்
சாரலில் விளைந்த சந்தனம் போன்று
கோடைக்காலத்தில் குளிர்ச்சி உடையவள்.
பனிக்காலத்திலோ,
உள்வாங்கிய சூரியக்கதிர்கள்
தன்னுள் சிறைப்படுமாறு கூம்பி,
அலையும் வெயில் பொதிந்த
அழகான தாமரையின் உட்புறம் போன்று
சிறிது வெப்பம் கொண்டவள்.

No comments:

Post a Comment