பாலை - தலைவி கூற்று
நெஞ்சே நிறை ஒல்லாதே அவரே
அன்பு இன்மையின் அருள் பொருள் என்னார்
வன்கண் கொண்டு வலித்து வல்லுநரே
அரவு நுங்கு மதியினுக்கு இவணோர் போலக்
களையார் ஆயினுங் கண் இனிது படீஇயர்
அஞ்சல் என்மரும் இல்லை அந்தில்
அளிதோ தானே நாணே
ஆங்கு அவர் வதிவயின் நீங்கப் படினே.
-புலவர் பெயர் தெரியவில்லை.
நிறை - நிலையாக நிற்றல். வன்கண் - கொடுமை. வலித்து - துன்புறுத்தி. அரவு - பாம்பு. நுங்கு - விழுங்கும். மதி - நிலவு. இவண் - இவ்வுலகம். அந்தில் - அசைச் சொல். அளிது - இரங்கத் தக்கது. வதிவயின் - வசிப்பிடம்.
தலைவன் பொருள் தேடிப் போயிருக்க, அவன் பிரிவைத் தாங்க முடியாத தலைவி சொன்னது.
நெஞ்சம் ஒரு நிலையில் இல்லை.
அவரோ, அன்பு இல்லாததால்
அருளே பொருள் என்று நினையார்.
இரக்கமின்றி வருத்துவதில் வல்லவர் ஆனார்.
பாம்பு விழுங்கும்போது
நிலவினைக் காப்பாற்றாத இவ்வுலகத்தவர் போல
என் துன்பத்தைக் களையாமல்
இனிது உறங்குகின்றனர் இவ்வூர் மக்கள்.
அஞ்சாதே என்பவரும் இல்லை.
இரங்கத் தக்கது நாணம்.
அவர் இருக்கும் இடத்திற்கு
நாம் நீங்கிச் சென்றால்.
Thursday, June 1, 2023
குறுந்தொகை 395 - அரவு நுங்கு மதி
குறுந்தொகை 393 - வாகைப் பறந்தலைப் பாண்டியன்
மருதம் - தோழி கூற்று
மயங்கு மலர்க் கோதை குழைய மகிழ்நன்
முயங்கிய நாள் தவச் சிலவே அலரே
கூகைக் கோழி வாகைப் பறந்தலைப்
பசும்பூண் பாண்டியன் வினைவல் அதிகன்
களிறொடு பட்ட ஞான்றை
ஒளிறு வாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே.
-பரணர்.
மயங்கு - கலந்து. கோதை - மாலை. குழைய - கசங்க. மகிழ்நன் - மருத நிலத் தலைவன். முயங்குதல் - தழுவுதல். அலர் - வதந்தி. கூகை - கோட்டான். பறந்தலை - போர்க்களம். வினை வல் - போர் செய்வதில் வல்ல. களிறு - யானை. ஞான்று - பொழுது. ஆர்ப்பு - ஆரவாரம்.
தலைவன், தலைவி காதல் குறித்து ஊரில் எழுந்த வதந்தியைச் சுட்டிக்காட்டி, தலைவியை விரைவில் திருமணம் செய்யுமாறு, தலைவனுக்கு தோழி அறிவுரை சொன்னது.
பல மலர்களால் தொடுத்த மாலை கசங்கும்படி
தலைவன் தழுவிய நாட்கள் சிலவே.
அதனால் எழுந்த வதந்தியோ,
கோட்டான் பறக்கும் வாகை எனும் ஊர்ப் போர்க்களத்தில்
பசும்பூண் பாண்டியனின் தளபதி
போர்க்கலை வல்ல அதிகன்
தன் யானையோடு இறந்து வீழ்ந்தபோது
(அவனை வென்ற)
ஒளிரும் வாளேந்திய கொங்கர்கள் செய்த
ஆரவாரத்தினும் பெரிது.
பசும்பூண் பாண்டியன் - ஒரு பாண்டிய மன்னன். இவனது தளபதி அதிகன். கொங்கர்களை அடக்கி வருமாறு அதிகனை பாண்டியன் அனுப்பினான். இரு தரப்பினரும் வாகைப் பறந்தலை என்னும் இடத்தில் போரிட்டனர். அப்போரில் அதிகன் கொங்கர்களால் கொல்லப்பட்டான்.
குறுந்தொகை 387 - கங்குல் வெள்ளம்
முல்லை - தலைவி கூற்று
எல்லை கழிய முல்லை மலரக்
கதிர் சினம் தணிந்த கையறு மாலையும்
இர வரம்பாக நீந்தினம் ஆயின்
எவன் கொல் வாழி தோழி
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே.
-கங்குல் வெள்ளத்தார்.
எல்லை - கதிரவன். கையறு - ஏதும் செய்ய முடியாத நிலையிலான வருத்தம். இர -இரவு. வரம்பு - எல்லை. கங்குல் - இரவு.
தலைவன் பொருள் தேடிப் போயிருக்க, அவனது பிரிவால் வருத்தமுற்று இருந்த தலைவிக்கு ஆறுதல் கூறிய தோழியிடம், தலைவி சொன்னது.
பகல் கழிந்தது.
முல்லை மலர்ந்தது.
கதிரவன் சினம் தணிந்த
கையறு நிலையின் மாலைப்பொழுது.
அதனை
இரவை வரம்பாக எண்ணி
நீந்திக் கடந்தோம்.
ஆயினும், என்ன பயன்? தோழி!
இனி
இரவு என்னும் வெள்ளம்.
கடலை விடப் பெரியது.
குறுந்தொகை 385 - புதுவோர்த்து அம்ம அழுங்கல் ஊரே
குறிஞ்சி - தலைவி கூற்று
பலவின் சேர்ந்த பழம் ஆர் இனக்கலை
சிலை வில் கானவன் செந்தொடை வெரீஇச்
செரு உறு குதிரையின் பொங்கிச் சாரல்
இரு வெதிர் நீடு அமை தயங்கப் பாயும்
பெரு வரை அடுக்கத்துக் கிழவோன் என்றும்
அன்றை அன்ன நட்பினன்
புதுவோர்த்து அம்ம இவ் அழுங்கல் ஊரே.
-கபிலர்.
பலவின் - பலா மரத்தின். ஆர் - உண்ணுதல். கலை - ஆண்குரங்கு. சிலை - சிலை மரம். தொடை - அம்பு. வெரீஇ - பயந்து. செரு - படைக்களம். இரு - பெரிய. வெதிர் - மூங்கில். அமை - கோல். தயங்க - அசைய. வரை - மலை. அடுக்கம் - மலைச்சாரல். அழுங்கல் - ஆரவாரம்.
தலைவிக்கு திருமணம் செய்ய பெற்றோர் முயற்சி எடுத்தபோது, தோழிக்கு தலைவி சொன்னது.
பலா மரத்துப் பழங்களை உண்ட ஆண்குரங்கு,
சிலை மரத்தால் செய்யப்பட்ட வில்லினை ஏந்திய
கானவனின் குறிதவறாத அம்புக்கு அஞ்சி,
போர்க்குதிரை போலப் பொங்கி எழுந்து
நீடுயர் மூங்கில்கள் அசையும்படி தாவும்
நெடிதுயர் மலைநாட்டுத் தலைவன்.
அவன் என்றும்
அன்று போலவே நட்பு உடையவன்.
புதியவர்களை திருமணம் பேசுவது
இந்த ஆராவாரமிக்க ஊர்தான்.
குறுந்தொகை 378 - மடமா அரிவை போகிய சுரனே
பாலை - செவிலித்தாய் கூற்று
ஞாயிறு காயாது மர நிழல் பட்டு
மலைமுதல் சிறு நெறி மணல் மிகத் தாஅய்
தண் மழை தலை இன்று ஆக நம் நீத்து
சுடர் வாய் நெடு வேல் காளையொடு
மட மா அரிவை போகிய சுரனே
-கயமனார்
மலை முதல் - மலை அடிவாரம். நெறி - வழி. தண் -குளிர்ந்த. இன்று - அசைச்சொல். நீத்து - பிரிந்து. சுடர்வாய் - ஒளி பொருந்திய. மா - மாந்தளிர் நிறம். சுரன் - பாலைநிலப் பாதை.
திருமணத்திற்குப் பெற்றோர் சம்மதம் தராததால், தலைவனுடன் தலைவி உடன்போய்விட, அவளை எண்ணி செவிலித்தாய் சொன்னது.
கதிரவன் காயாமல் மர நிழல் பரவட்டும்.
அந்த மலை அடிவாரப் பாதை
(கற்கள் இல்லாமல்) மணல் நிறைந்து இருக்கட்டும்.
குளிர்ந்த மழை பொழியட்டும்.
நம்மைப் பிரிந்து
ஒளிரும் நெடுவேல் பிடித்த காளையொடு
மடமையும், மாந்தளிர் நிறத்து அழகும் கொண்ட
அவள் சென்ற பாலை நிலப் பாதை.
குறுந்தொகை 376 - சிறு வெம்மையளே
நெய்தல் - தலைவன் கூற்று
மன் உயிர் அறியாத் துன்னரும் பொதியில்
சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப
வேனிலானே தண்ணியள் பனியே
வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி ஐயென
அலங்கு வெயிற் பொதிந்த தாமரை
உள்ளகத்து அன்ன சிறு வெம்மையளே.
-படுமரத்து மோசிக்கொற்றனார்.
துன்னுதல் - நெருங்குதல். பொதி - பொதிய மலை. சூர் - தெய்வம். அடுக்கம் - மலைப்பக்கம். பொதி - பொதிகை மலை. ஆரம் - சந்தனம். கடுப்ப - போல. வேனில் - கோடைக்காலம். பனி - பனிக்காலம். தண் - குளிர்ச்சி. ஐ - அழகு. அலங்கு - அசையும்.
உலகினில் வாழும் உயிர்கள் அறிய இயலாத,
நெருங்க முடியாத பொதிகை மலையின்
தெய்வங்கள் உறையும்
சாரலில் விளைந்த சந்தனம் போன்று
கோடைக்காலத்தில் குளிர்ச்சி உடையவள்.
பனிக்காலத்திலோ,
உள்வாங்கிய சூரியக்கதிர்கள்
தன்னுள் சிறைப்படுமாறு கூம்பி,
அலையும் வெயில் பொதிந்த
அழகான தாமரையின் உட்புறம் போன்று
சிறிது வெப்பம் கொண்டவள்.
குறுந்தொகை 368 - நீத்தத் திண்கரைப் பெருமரம்
மருதம் - தலைவி கூற்று
மெல்லியலோயே மெல்லியலோயே
நல் நாள் நீத்த பழி தீர் மாமை
வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பின்
சொல்லகிற்றாம் மெல்லியலோயே
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே
நாள் இடைப் படாஅ நளி நீர் நீத்தத்து
திண்கரைப் பெரு மரம் போல
தீது இல் நிலைமை முயங்குகம் பலவே.
-நக்கீரனார்
நீத்த - நீங்கிய.. மாமை - மாந்தளிர் நிறம். வன்பு - வலிமை. செப்புதல் - சொல்லுதல். நீத்தம் - வெள்ளம். முயங்குதல் - தழுவுதல்.
தான் விரும்பிய தலைவனுடனேயே பெற்றோர் திருமணம் நிச்சயம் செய்துவிட, அச்செய்தியைக் கொணர்ந்த தோழிக்கு தலைவி சொன்னது.
மென்மையான இயல்பினளே!
(முன்னர் தலைவனோடு கூடியிருந்த)
ஒரு நல்ல நாளில்
என்னை விட்டு நீங்கியது மாசற்ற அழகு.
(ஊரார் பழிச்சொல்லை)
மனவலிமையால் பொறுத்தோமே அன்றி
வெளியே சொல்லும் நிலையில் இருக்கவில்லை.
இனி,
சிறியோரும் பெரியோரும் வாழும் இவ்வூரில்,
இடைவிடாது நீர்வெள்ளத்தால் நனைக்கப்படும்
ஆற்றங்கரைப் பெருமரம் போன்று
பெருவளத்தோடு, பழியற்ற நிலையில்
தழுவுவோம் பலமுறை.
குறுந்தொகை 362 - ஒண்தார் அகலம் உண்ணுமோ பலி
குறிஞ்சி - தோழி கூற்று
முருகு அயர்ந்து வந்த முது வாய் வேல
சினவல் ஓம்புமதி வினவுவது உடையேன்
பல் வேறு உருவில் சில் அவிழ் மடையொடு
சிறு மறி கொன்று இவள் நறு நுதல் நீவி
வணங்கினை கொடுத்தி ஆயின் அணங்கிய
விண்தோய் மாமலைச் சிலம்பன்
ஒண்தார் அகலமும் உண்ணுமோ பலியே.
-வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார்.
முருகு - முருகன். அயர்தல் - வெறியாட்டு வழிபாடு. முதுவாய் - அறிவுமிக்க. வேலன் - வேலன் வேடமிட்ட பூசாரி. ஓம்புமதி - தவிர்ப்பாய். அவிழ் - சோறு. மடை - படையல். மறி - ஆட்டுக்குட்டி. நறு - மணமுள்ள. நுதல் - நெற்றி. அணங்கிய - வருத்திய. சிலம்பன் - மலைநாட்டுத் தலைவன். ஒள் - ஒளிரும். தார் - மாலை. அகலம் - மார்பு.
தலைவன் உடனான காதலால் தலைவி உடல் மெலிய, அது ஏதோ ஒரு நோயினால் ஏற்பட்டது என்று எண்ணி, அதற்குப் பரிகாரமாக, தாய் ஏற்பாடு செய்த முருகன் வெறியாட்டு நிகழ்வில், தலைவியின் காதலை யாவரும் அறியும் வண்ணம் வெளிப்படுத்தி, தோழி கூறியது.
முருகனுக்கு வெறியாட்டு வழிபாடு செய்யும்
அறிவு மிகுந்த வேலனே!
சினம் தவிர்ப்பாய்.
உன்னிடம் ஒரு கேள்வி.
பல நிற சோற்றுப் படையலோடு
சிறிய ஆட்டுக்குட்டியைக் கொன்று
இவள் மணம் கமழ் நெற்றியை நீவி
கடவுளை வணங்கி பலி கொடுக்கிறாய்.
இவளை வருத்திய
விண் தொடும் சிகரங்கள் நிறைந்த
மலை நாட்டுத் தலைவனின்
ஒளிரும் மாலை அணிந்த மார்பும்
உண்ணுமோ உன் பலியை.
குறுந்தொகை 361 - உயர்நிலை உலகமும் சிறிதால்
குறிஞ்சி - தலைவி கூற்று
அம்ம வாழி தோழி அன்னைக்கு
உயர்நிலை உலகமும் சிறிதால் அவர் மலை
மாலைப் பெய்த மணங் கமழ் உந்தியொடு
காலை வந்த காந்தள் முழுமுதல்
மெல் இலை குழைய முயங்கலும்
இல் உய்த்து நடுதலும் கடியாதோளே.
-கபிலர்.
உயர்நிலை உலகம் - தேவருலகம். உந்தி - ஆறு. முழுமுதல் - வேருடன் கூடிய முழுச்செடி. முயங்குதல் - தழுவுதல். இல் - இல்லம்.
தலைவனோடு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்ததை அறிந்த தோழி, இத்தனை காலம் தலைவனைப் பிரிந்திருந்ததை எப்படிப் பொறுத்தாய் எனக் கேட்டபோது, தலைவி சொன்னது.
தோழி!
அன்னைக்கு கைம்மாறாகத் தருவதற்கு
தேவருலகமும் சிறிதே.
அவரது மலையில்
மாலையில் பெய்த மழையில் பெருகிய
மணங்கமழ் ஆற்று வெள்ளத்தில்
காலையில் வந்தது காந்தளின் முழுச்செடி.
அதனை இலைகள் கசங்கத் தழுவவும்
இல்லத்தில் நட்டு வைக்கவும்
தடை சொல்லாதவள்.
குறுந்தொகை 356 - தளிர் அன்னோளே
பாலை - செவிலித்தாய் கூற்று
நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆர் இடைக்
கழலோன் காப்பக் கடுகுபு போகி
அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த
வெவ் வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய
யாங்கு வல்லுநள்கொல் தானே ஏந்திய
செம் பொற் புனை கலத்து அம் பொரிக் கலந்த
பாலும் பல என உண்ணாள்
கோல் அமை குறுந் தொடித் தளிர் அன்னோளே.
-கயமனார்.
ஆன்று - அடங்கி. அவிந்த - மறைந்த. ஆர் இடை - அரிய வழி. கடுகுபு - வேகமாக. அறுசுனை - நீரற்ற சுனை. மருங்கு - பக்கம். மறுகுபு - உலர்ந்த. வெவ்வெம் - சூடான. கலுழி - கலங்கிய நீர். தவ் - ஓசைக்குறிப்பு. கோல் - திரண்ட. தொடி - வளையல்.
பெற்றோர் திருமணத்திற்கு ஒப்பாததால், தலைவனுடன் தலைவி உடன்போய்விட, அவளை நினைந்து செவிலித்தாய் வருந்திச் சொன்னது.
நிழலற்ற, நீர் வறண்ட பாலை நிலப் பாதையில்
கழலணிந்த தலைவன் காக்க
விரைந்து சென்று விட்டாள்.
நீரில்லாச் சுனையின் அருகில்
உலர்ந்து, வெந்துபோன கலங்கல் நீரை
'தவ் தவ்' என்று ஒலியெழக் குடிக்கும்
மனவலிமை எப்படிப் பெற்றாள்?
தான் ஏந்திய பொற்கிண்ணத்தில்
பொரி கலந்த பாலைக்கூட
'போதும், அதிகம்' என்று சொல்லிய,
குறு வளையல்கள் அணிந்த
தளிர் போன்றவள்.
குறுந்தொகை 340 - அழுவம் நின்ற அலர்வேய் கண்டல்
நெய்தல் - தலைவி கூற்று
காமம் கடையின் காதலர்ப் படர்ந்து
நாம் அவர்ப் புலம்பின் நம்மோடு ஆகி
ஒருபாற் படுத்தல் செல்லாது ஆயிடை
அழுவம் நின்ற அலர் வேய் கண்டல்
கழி பெயர் மருங்கின் ஒல்கி ஓதம்
பெயர் தரப் பெயர் தந்தாங்கு
வருந்தும் தோழி அவர் இருந்த என் நெஞ்சே.
-அம்மூவனார்
கடைதல் - மிகுதல். புலம்பு - வருத்தம். ஒரு பாற் படுத்தல் - ஒரு நிலையில் நிற்றல். ஆயிடை - அவ்விடம். அழுவம் - கடல். அலர் வேய் - மலர்கள் பொருந்திய. கண்டல் - தாழை மரம். மருங்கு - பக்கம். ஒல்கி - சாய்ந்து. ஓதம் -அலை. பெயர்தல் - நகர்தல்.
காதல் கூடும்போது அவரிடம் செல்கின்றது.
நாம் அவரிடத்தில் ஊடல் கொள்ளும்போது
நம்மிடம் சேர்கின்றது.
கடற்கரையில் நிற்கும் மலர்கள் நிறைந்த தாழை மரம்
அலை வரும்போது
கரையின் பக்கம் சாய்ந்திருந்து,
அலை திரும்பும் போது
அதனுடன் பெயர்ந்து, கடலின் பக்கம் சாய்வது போல
ஒரு நிலையில் நில்லாது வருந்துகிறது, தோழி!
அவர் இருந்த என் நெஞ்சு.
குறுந்தொகை 323 - படுமலை பண்ணிய எழால்
முல்லை - தலைவன் கூற்று
எல்லாம் எவனோ பதடி வைகல்
பாணர் படுமலை பண்ணிய எழாலின்
வானத்து எழும் சுவர் நல் இசை வீழப்
பெய்த புலத்துப் பூத்த முல்லைப்
பசு முகைத் தாது நாறும் நறு நுதல்
அரிவை தோள் இணைத் துஞ்சிக்
கழிந்த நாள் இவண் வாழு நாளே.
-பதடி வைகலார்
பதடி - பதர். வைகல் - நாள். படுமலை - ஒருவகைப் பண். எழால் - யாழ். சுவர் - உச்ச ஒலி. வீழ - போல. புலம் - தோட்டம். முகை - மொட்டு. நுதல் - நெற்றி. துஞ்சுதல் - தூங்குதல். இவண் - இங்கு.
மற்றவை எல்லாம்
பதர் போன்று பயனற்ற நாட்களே.
பாணர்கள் படுமலைப் பண்ணில் யாழ் மீட்டும்போது
வானத்தில் எழும் இசையைப் போல
உச்ச ஒலியுடன் மழை பொழியும்
தோட்டத்தில் பூத்த முல்லைப் பூப்போன்று
மணக்கும் நெற்றியையுடைய
அவளின் தோள்களில் உறங்கிக் கழித்த நாட்களே
இவ்வுலகில் வாழும் நாட்கள்.
குறுந்தொகை 322 - மனை உறை வாழ்க்கை
குறிஞ்சி - தலைவி கூற்று
அமர்க் கண் ஆமான் அம் செவிக் குழவி
கானவர் எடுப்ப வெரீஇ இனம் தீர்ந்து
கானம் நண்ணிய சிறுகுடிப் பட்டென
இளையர் ஓம்ப மரீஇய அவண் நயந்து
மனை உறை வாழ்க்கை வல்லியாங்கு
மருவினின் இனியவும் உளவோ
செல்வாம் தோழி ஒல்வாங்கு நடந்தே.
-ஐயூர் முடவனார்.
அமர் - விருப்பம். ஆமான் - காட்டுப்பசு. அம்செவி - அழகிய காது. குழவி - கன்று. எடுப்ப - ஒலி எழுப்ப. வெரீஇ - பயந்து. ஓம்ப - பாதுகாக்க. மரீஇ - பழகி. அவண் - அங்கு. நயந்து - விரும்பி. மருவுதல் - கலத்தல். ஒல்வாங்கு - இயன்றவரை.
தலைவனுடன் திருமணம் செய்ய விரும்பிய தலைவி, தன் விருப்பத்தை அவனுக்கு தெரிவிக்கும் விதமாய், தோழிக்குச் சொன்னது.
விரும்பத்தக்க கண்களையுடைய காட்டுப்பசு.
அதன் அழகிய காதுகள் கொண்ட கன்றுக்குட்டி
கானவர் எழுப்பிய ஒலிக்கு வெருண்டு
தன் இனத்தினைப் பிரிந்து
காட்டருகே சிற்றூர் சேர்ந்து
அங்கு இளம்பெண்கள் அரவணைக்க
அவ்விடம் பிடித்துப்போய்
மனை வாழ்க்கைக்கு வலிமை பெற்றது.
அது போல
கூடிப் பழுகுதலை விட இனியவும் உளவோ?
போவோம் தோழி!
தலைவன் இருப்பிடத்திற்கு.
இயன்றவரை நடந்து.
குறுந்தொகை 312 - இரண்டறி கள்வி
குறிஞ்சி - தலைவன் கூற்று
இரண்டு அறி கள்வி நம் காதலோளே
முரண் கொள் துப்பின் செவ்வேல் மலையன்
முள்ளூர்க் கானம் நாற வந்து
நள்ளென் கங்குல் நம் ஓரன்னள்
கூந்தல் வேய்ந்த விரவு மலர் உதிர்த்துச்
சாந்துளர் நறுங் கதுப்பு எண்ணெய் நீவி
அமரா முகத்தளாகித்
தமர் ஓரன்னள் வைகறையானே.
-கபிலர்.
கள்வி - கள்ளத்தனம் கொண்டவள். முரண் - பகை. துப்பு - வலிமை. நாற்றம் - நறுமணம். கங்குல் - இரவு. ஓரன்னள் - ஒன்றும் தன்மையள். விரவுதல் - கலத்தல். உளர்தல் - பூசுதல். கதுப்பு - கூந்தல். அமரா - வேறுபட்ட. தமர் - சுற்றத்தவர்.
இரவினில் தலைவியை சந்தித்த தலைவன், அவளை மணமுடிக்க வேண்டும் என்று நெஞ்சுக்குச் சொன்னது.
இரண்டுவித நடத்தையை அறிந்த
கள்ளத்தனம் மிக்கவள் நம் காதலி.
எப்பகைவரையும் வெல்லும் செவ்வேல் மலையனின்
முள்ளூர்க் காட்டுத் தென்றல் போல
நறுமணம் கமழ வந்து
நள்ளிரவில் நம்மோடு ஒன்று கூட அறிந்தவள்.
நாம் சூட்டிய பல மலர்களை உதிர்த்துவிட்டு,
சாந்து பூசிய கூந்தலில் எண்ணெய் தடவி
வேறு முகம் கொண்டவளாய்
தன் சுற்றத்தாரோடு ஒன்று சேர அறிந்தவள்
விடியற் காலையில்.
மலையன் - கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகிய மலையமான் திருமுடிக்காரி. முள்ளூர் - அவனது ஆட்சிக்குட்பட்ட ஒரு ஊர்.
குறுந்தொகை 307 - இன்னம் பிறந்தன்று பிறையே
பாலை - தலைவி கூற்று
வளை உடைத்து அனையதாகிப் பலர் தொழச்
செவ்வாய் வானத்து ஐ எனத் தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே அன்னோ
மறந்தனர் கொல்லோ தாமே களிறு தன்
உயங்கு நடை மடப்பிடி வருத்தம் நோனாது
நிலை உயர் யாஅந் தொலையக் குத்தி
வெண் நார் கொண்டு கைசுவைத்து அண்ணாந்து
அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும்
அத்த நீள் இடை அழப் பிரிந்தோரே.
-கடம்பனூர்ச் சாண்டிலியனார்
ஐ - விரைந்து. களிறு - ஆண் யானை. உயங்கு - சோர்வு. பிடி - பெண் யானை. நோனாது - தாங்காது. யா - யா மரம். நார் - மரப்பட்டை. கை - துதிக்கை. அழுங்கல் - துயரம். அத்தம் - பாலை நிலம்.
பொருள்தேடிச் சென்ற தலைவன், திரும்பி வருவதாக குறித்துச் சென்ற காலம் தாண்டி, மேலும் ஒரு மாதம் கடந்த நிலையில் தலைவி சொன்னது.
உடைந்த வளையல் போல விளங்கி
பலரும் கை தொழ
சிவந்த வானத்தில் விரைந்தெழுந்து பிறந்து விட்டது
இன்னொரு மூன்றாம் பிறை.
மறந்து விட்டாரோ?
ஆண் யானை,
சோர்ந்து நடக்கும் பெண் யானையின்
தாகத்தைக் கண்டு பொறுக்க முடியாமல்,
உயர்ந்த யாமரத்தை தந்தத்தால் குத்தி, பட்டையை உரித்து
தன் வெறுங் கையையே சுவைத்து
அண்ணாந்து பார்த்து, துயர நெஞ்சோடு பிளிறும்
வறண்ட பாலை நிலத்து நீண்ட பாதையில்
என்னை அழவைத்து விட்டுப் பிரிந்து போனவர்.
பிறை - மூன்றாம் பிறை. சங்ககால மக்கள் மூன்றாம் பிறையைக் கொண்டு மாதங்களைக் கணக்கிட்டனர். மூன்றாம் பிறையைத் தொழும் வழக்கமும் இருந்தது.
குறுந்தொகை 292 - வரையா நிரையம்
குறிஞ்சி - தோழி கூற்று
மண்ணிய சென்ற ஒள் நுதல் அரிவை
புனல் தரு பசுங் காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள் நிறை
பொன் செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
பெண் கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை
ஒரு நாள் நகை முக விருந்தினன் வந்தெனப்
பகை முக ஊரின் துஞ்சலோ இலளே.
-பரணர்
மண்ணுதல் - நீராடல். நுதல் - நெற்றி. புனல் - வெள்ளம். களிறு - யானை. நிறை – எடை. பாவை - பதுமை. வரையா - மீளமுடியாத. நிரையம் - நரகம். பகைமுகம் – போர் முனை. துஞ்சுதல் - தூங்குதல்.
தலைவனிடமிருந்து தலைவியைப் பிரித்து வைத்த தாயைக் குறித்து, கோபத்தோடு தோழி கூறியது.
நீராடச் சென்ற, ஒளிரும் நெற்றிப் பெண்ணொருத்தி
வெள்ளத்தில் மிதந்து வந்த
(காவல் மரத்தின்) பசுங்காயைத் தின்ற குற்றத்திற்காக
எண்பத்தொன்று யானைகளோடு
எடைக்கு எடை பொன்னாலான பதுமையை
அவள் தந்தை கொடுத்த போதும்
அவற்றை ஏற்காமல்
பெண்கொலை புரிந்த நன்னன் போல
மீளமுடியாத நரகத்திற்குச் செல்லட்டும் அன்னை.
ஒரே ஒரு நாள், மலர்ந்த முகத்தோடு
விருந்தினன் (வேடத்தில் தலைவன்) வந்தான் என்பதற்காக
போர் நிகழும் ஊரின் மக்கள் போலத்
துயிலாமல் இருக்கிறாள்.
நன்னன் - சங்ககாலத்து மன்னர் காவல் மரங்கள் வளர்த்தனர். அவ்வாறு நன்னன் மாமரம் ஒன்று வளர்த்தான். அதன் கனியைப் புசித்த பெண்ணிற்கு மரணதண்டனை விதித்து, பெண்கொலை புரிந்தவன் என்ற இகழிச்சிக்கு ஆளானான்.
குறுந்தொகை 283 - நெடு மூதிடைய நீரில் ஆறு
பாலை - தலைவி கூற்று
உள்ளது சிதைப்போர் உளர் எனப் படாஅர்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு எனச்
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச்
சென்றனர் வாழி தோழி என்றும்
கூற்றத்தன்ன கொலை வேல் மறவர்
ஆற்று இருந்து அல்கி வழங்குநர்ச் செகுத்த
படு முடைப் பருந்து பார்த்திருக்கும்
நெடு மூது இடைய நீர் இல் ஆறே.
-பாலை பாடிய பெருங்கடுங்கோ
இரவு - யாசகம். இளிவு - இழிவு. கூற்றம் - எமன். ஆறு – பாதை. அல்கி - தங்கி. வழங்குநர் - வழிப்போக்கர். செகுத்தல் - கொல்லுதல். முடை - புலால். மூது - முதிய.
தலைவன் பொருள் தேடிப் பிரிந்து சென்றிருக்க, அவன் சென்ற பாலை நிலப் பாதையின் கொடுமையை எண்ணி, தலைவி சொன்னது.
தம் முன்னோர் விட்டுச் சென்ற செல்வத்தைச்
சிதைத்து வாழ்வோர், செல்வந்தர் எனப்படார்.
தாமே முயன்று ஈட்டிய பொருள்
இல்லாதார் வாழ்க்கை, இரத்தலை விட இழிவானது.
என்று மனவலிமையோடு சொல்லிச் சென்றார், தோழி!
எமனைப் போன்ற, கொலை வேல் பிடித்த கொள்ளையர்
பாதையில் மறைந்திருந்து
வழிப்போக்கரை மாய்ப்பதால் கிடைக்கும்
புலாலுக்காகப் பருந்துகள் காத்திருக்கும்
தொன்மையான நீரற்ற பாலைநிலத்து வழியே.
குறுந்தொகை 280 - அரைநாள் வாழ்வும் வேண்டேன்
குறிஞ்சி - தலைவன் கூற்று
கேளிர் வாழியோ கேளிர் நாளும் என்
நெஞ்சு பிணிக் கொண்ட அம் சில் ஓதிப்
பெருந் தோள் குறுமகள் சிறு மெல் ஆகம்
ஒரு நாள் புணரப் புணரின்
அரை நாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே.
-நக்கீரனார்.
கேளிர் - நண்பர். பிணித்தல் - கட்டுதல். அம் - அழகிய. ஓதி - கூந்தல். ஆகம் - மேனி.
நண்பா, நீ வாழ்க!
நாளும் என் நெஞ்சத்தைக் கட்டிவைத்த
அழகிய கூந்தலையும்
பெருந்தோள்களையும் உடைய
அவளின் மென்மையான மேனியை
ஒரு நாள் கூடினால் போதும்
அதன்பின்
அரைநாள் வாழ்க்கையும் வேண்டேன் நான்.
குறுந்தொகை 277 - ஓர் இல் பிச்சை
பாலை - தோழி கூற்று
ஆசு இல் தெருவில் நாய் இல் வியன் கடை
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பில் பெறீஇயரோ நீயே
மின்னிடை நடுங்கும் கடைப்பெயல் வாடை
எக்கால் வருவது என்றி
அக்கால் வருவர் எம் காதலோரே.
- ஓரிற் பிச்சையார்
ஆசு -குற்றம். வியன் கடை - அகன்ற வாயில். அமலை - சோறு. இழுது - நெய். மாந்தி - உண்டு. அற்சிரம் - முன்பனிக்காலம். வெய்ய - விரும்பத்தக்க. செப்பு - பாத்திரம். பெயல் - மழை. வாடை - முன்பனிக்காலம்.
பொருள் தேடித் தலைவன் சென்றிருக்க, அவன் திரும்பி வருவதாகக் குறித்திருந்த வாடைக்காலம் எப்போது வருமென்று அறிவனிடம் அறிவுரை கேட்டு, தோழி சொன்னது.
(முக்காலமும் அறிந்த அறிவனே!)
மாசற்ற தெருவில்
நாயில்லாத அகன்ற வீட்டுவாயிலில்
செந்நெல் சோறும், வெண்ணிற நெய்யும்
(பல வீடுகளுக்குச் சுற்றித் திரியாமல்)
ஒரே வீட்டிலேயே பிச்சையாகப் பெற்று,
வயிறார உண்டு
குளிருக்கு இதமாக, கலத்தினில் சுடுநீர் பெறுவீராக!
மின்னல் இடை கொண்ட இவள்
நடுங்கும்படியான கடைசி மழை பொழியும்
வாடைக் காலம் எப்போது வரும்? கூறுவீர்.
அக்காலத்தே வருவார் எம் காதலர்.
அறிவன் - முக்காலமும் அறிந்த முனிவர். இவர்களிடம் மக்கள் அறிவுரை கேட்பர். நாயில் வியன் கடை - அந்தணர்கள் நாயும், கோழியும் இல்லத்தில் சேர்க்க மாட்டார் என்று பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது.
குறுந்தொகை 275 - தேர் மணி கொல்
முல்லை - தோழி கூற்று
முல்லை ஊர்ந்த கல் உயர் ஏறிக்
கண்டனம் வருகம் சென்மோ தோழி
எல் ஊர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப்
புல் ஆர் நல் ஆன் பூண் மணிகொல்லோ
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
வல் வில் இளையர் பக்கம் போற்ற,
ஈர் மணல் காட்டாறு வரூஉம்
தேர் மணி கொல்? ஆண்டு இயம்பிய உளவே.
-ஒக்கூர் மாசாத்தியார்
கல் - குன்று. எல் - மாலை. ஏறு - காளை. காட்டாறு - காட்டு வழி. ஆர்தல் - உண்ணுதல். ஆன் - பசு. செம்மல் - நிறைந்த. ஆறு - வழி. ஆண்டு - அங்கு. .இயம்பிய - ஒலித்த.
பொருள் தேடிச் சென்ற தலைவன், திரும்பி வருவதாய் சொல்லிச் சென்ற, முல்லை மலரும் கார் காலம் வந்ததை எண்ணி, தலைவிக்கு தோழி சொன்னது.
முல்லைக் கொடி படர்ந்த குன்றின் மீதேறி
கண்டு வருவோம், வருவாய் தோழி!
மாலை வேளையில் ஊர்திரும்பும்
காளைகளுடன் கூடிய
புல் மேய்ந்த பசுக்கூட்டத்தின் கழுத்து மணியோ?
சென்ற செயல் முடித்த நிறைந்த உள்ளத்தோடு
வில்லேந்திய வலிமைமிக்க இளைஞர்கள் பாதுகாக்க
ஈர மணல் காட்டு வழியே வருகின்ற
தலைவனின் தேர் மணியோ?
அங்கு கேட்கும் ஒலி.
குறுந்தொகை 274 - இன்னாக் கானமும் இனிய
பாலை - தலைவன் கூற்று
புறவுப் புறத்தன்ன புன் கால் உகாஅய்க்
காசினை அன்ன நளி கனி உதிர
விடு கணை வில்லொடு பற்றிக் கோடு இவர்பு
வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர்
நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும்
இன்னாக் கானமும் இனிய பொன்னொடு
மணி மிடை அல்குல் மடந்தை
அணி முலை ஆக உள்கினம் செலினே.
-உருத்திரனார்
புறவு - புறா. புறம் - முதுகு. புன்கால் - மெல்லிய அடிப்பாகம். உகாய் - ஒரு மரம். காசு - மணி. கணை - அம்பு. கோடு - உச்சி. இவர்பு - ஏறுதல். வருநர் – வழிப்போக்கர். வன்கண் - இரக்கமற்ற. நசை - விருப்பம். அல்குல் - இடை. ஆகம் - மார்பு. உள்குதல் - நினைத்தல்.
தலைவியைப் பிரிந்து, பொருள் தேடிச் செல்ல எண்ணிய தலைவன், தான் போக வேண்டிய கொடிய பாலைநில வழியை நினைந்து, தன் நெஞ்சுக்குச் சொன்னது.
புறா முதுகு போன்று
மென்மையான அடிப்பாகமுடைய உகாய் மரத்தின்
மணி போன்ற கனிகள் உதிரும்படி செலுத்தப்படும்
அம்போடு, வில்லையும் ஏந்தி,
மலை உச்சி மீது ஏறி நின்று
வழிப்போக்கர் யாரும் வருகிறார்களா எனப் பார்த்திருக்கும்
இரக்கமில்லாக் கள்வர்கள்.
அவர்கள் தண்ணீர் கிடைக்காமல்
தாகம் தணிக்க மரப்பட்டையை மெல்லும்
கொடிய பாலைநிலப் பாதையும் இனிமையானதே!
பொன்னொடு, மணியும் சேர்த்துக் கட்டிய
நகைகள் அணிந்த இடை கொண்ட
அவளது அழகிய முலைகளை
நினைத்துக் கொண்டு நடந்தால்.
குறுந்தொகை 269 - இனி வரின் எளியள்
நெய்தல் - தலைவி கூற்று
சேய் ஆறு சென்று துனை பரி அசாவாது
உசாவுநர்ப் பெறினே நன்றுமன் தில்ல
வயச் சுறா எறிந்த புண் தணிந்து எந்தையும்
நீல் நிறப் பெருங்கடல் புக்கனன் யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்பு விளை கழனிச் சென்றனள் அதனால்
பனி இரும்பரப்பின் சேர்ப்பற்கு
இனி வரின் எளியள் என்னும் தூதே
-கல்லாடனார்
சேய் ஆறு - நெடுந்தொலைவு. துனை - விரைவு. பரிதல் - ஓடுதல். அசாவாது - அயர்சியின்றி. உசாவுதல் - ஆலோசனை கூறுதல். வயம் - வலிமை. எந்தை - எம் தந்தை. யாய் - தாய். பனி - குளிர். இரும் - அகண்ட. சேர்ப்பன் - நெய்தல் நிலத் தலைவன்.
வீட்டில் தனித்திருந்த தலைவி சொன்னது.
நெடுந்தூரம் சென்று
விரைவாய் ஓடியதில் அயர்ச்சி அடையாமல்
செய்தி சொல்லும் தூதுவர் கிடைத்தால்
நன்றாய் இருக்கும்.
சுறாமீன் தாக்கியதால் உண்டான புண் தணிந்து
என் தந்தையும் நீலப் பெருங்கடலுக்குச் சென்று விட்டான்.
என் தாயும் உப்பு விற்று வெண்ணெல் வாங்கி வர
உப்பளம் சென்று விட்டாள்.
குளிர்ந்த நெடும் பரப்புடைய நெய்தல் நிலத்துத் தலைவர்
இப்போது வந்தால்
எளிதில் கிடைப்பாள்
என்னும் தூது.
குறுந்தொகை 266 - புள்வாய் தூது
பாலை - தலைவி கூற்று
நமக்கு ஒன்று உரையார் ஆயினுந் தமக்கு ஒன்று
இன்னா இரவின் இன் துணை ஆகிய
படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ
மறப்பரும் பணைத் தோள் மரீஇத்
துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே.
-நக்கீரனார்.
இன்னா - துன்பம். படப்பை - தோட்டம். வேங்கை – ஒரு மரம். மறப்பரும் - மறக்க முடியாத. பணை - மூங்கில். மரீஇ - தழுவி. புள் - பறவை.
திருமணம் செய்வதாகச் சொல்லிச் சென்ற தலைவினிடமிருந்து சேதி எதுவும் வராத போது, தலைவி வருந்திச் சொன்னது.
நமக்கு ஒன்றும் சொல்லாவிட்டாலும் போகட்டும்.
தமக்கு துன்பம் தரும் இரவில்
(நாங்கள் சந்திக்க இடம் தந்து)
இனிய துணையாய் இருந்த
தோட்டத்து வேங்கை மரத்துக்கு
அனுப்ப மறந்தனரோ?
மறக்கவியலாத என் மூங்கில் தோள்களைத் தழுவிப்
பின்னர் பிரிந்து செல்ல வல்லவர்,
பறவை மூலம் தூது.
குறுந்தொகை 262 - பெருங்களிற்று அடிவழி நீர்
பாலை - தோழி கூற்று
ஊஉர் அலர் எழச் சேரி கல்லென
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை
தானே இருக்க தன் மனையானே
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க
உணல் ஆய்ந்திசினால் அவரொடு சேய் நாட்டு
விண் தொட நிவந்த விலங்கு மலைக் கவாஅற்
கரும்பு நடு பாத்தி அன்ன
பெருங் களிற்று அடி வழி நிலைஇய நீரே.
-பாலை பாடிய பெருங்கடுங்கோ.
அலர் - பழிச்சொல். ஆனாது - இடைவிடாது. அலைக்கும் - துன்புறுத்தும். முள் - கூரிய. எயிறு - பல். தயங்க - விளங்க. ஆய்ந்திசின் - ஆராய்ந்தேன். சேய் - தொலைவு. நிவந்த - உயர்ந்த. விலங்கு - குறுக்கிடும். கவான் - மலை. களிறு - யானை.
திருமணத்திற்குப் பெற்றோர் ஒப்பாததால் தலைவனுடன் உடன்போகுமாறு, தலைவிக்கு தோழி அறிவுறுத்தியது.
ஊரெல்லாம் பழிச்சொல் உண்டாக
சேரி கல்லென்று ஆரவாரிக்க,
இடைவிடாது துன்புறுத்ததும் அறமற்ற அன்னை
தன் மனையில் தனித்திருக்கட்டும்.
நெல்லிக்காயைத் தின்ற கூரிய பற்கள் விளங்க,
நீ குடிப்பதாய் நினைத்துப் பார்க்கிறேன்.
தொலைதூர நாட்டில்
விண்தொடும் மலை மீதமைந்த பாலை நிலப் பாதையில்
கரும்பு நடத் தோண்டிய பள்ளம் போன்று தோன்றும்
யானையின் காலடித் தடத்தில் தேங்கிய நீரை.
நெல்லி - வறண்ட பாலைநிலத்தே செல்வோர், உணவும், நீரும் கிடைக்காமையால், நெல்லிக் காயைத் தின்று, பின் குழிகளில் தேங்கிய நீரினை அருந்துவர் என்பது மரபு.
குறுந்தொகை 256 - தேர் விலங்கின தெரிவை கண்ணே
பாலை - தலைவன் கூற்று
மணி வார்ந்தன்ன மாக் கொடி அறுகை
பிணி கால் மென் கொம்பு பிணையொடும் ஆர்ந்த
மான் ஏறு உகளும் கானம் பிற்பட
வினை நலம் படீஇ வருதும் அவ்வரைத்
தாங்கல் ஒல்லுமோ பூங்குழையோய் எனச்
சொல்லா முன்னர் நில்லா ஆகி
நீர் விலங்கு அழுதல் ஆனா
தேர் விலங்கினவால் தெரிவை கண்ணே.
-பெயர் தெரியாப் புலவர்
வார்தல் - நீளுதல். மா - கருமை. அறுகை - அருகம்புல். பிணி - பின்னிய. கொம்பு - தண்டு. பிணை - பெண்மான். ஆர்தல் - உண்ணுதல். மான் ஏறு - ஆண் மான். உகளுதல் - துள்ளுதல். அவ்வரை - அதுவரை. ஒல்லுமோ - முடியுமோ. குழை - காதணி. ஆனா - நீங்காத.
பொருள் தேடிச் செல்ல திட்டமிட்ட தலைவன், அந்த எண்ணத்தை கைவிட்டுச் சொன்னது.
நீண்டு கிடக்கும் நீலமணிபோல் தோன்றும்
கருநிறக் கொடியான அருகம் புல்லின்
பின்னிப் பிணைந்த மெல்லிய தண்டினை
தன் இணையோடு வயிறார உண்டு
ஆண் மான் துள்ளி விளையாடும் காடு.
“அக்காட்டினைக் கடந்து
பொருள் ஈட்டச் சென்று வருகிறேன்
அதுவரை பிரிவைத் தாங்குவாயா?
அழகிய காதணி அணிந்தவளே!”
எனச் சொல்லி முடிப்பதன் முன்னம்,
தம் நிலையில் நில்லாது,
கண்ணீர் நிற்காமல் அழுதன.
என் தேர் கிளம்புவதையும் நிறுத்தின.
அவளின் கண்கள்.
குறுந்தொகை 253 - புலி புகாவுறுத்த கல்லளை
பாலை - தோழி கூற்று
கேளார் ஆகுவர் தோழி கேட்பின்
விழுமிது கழிவது ஆயினும் நெகிழ் நூல்
பூச்சேர் அணையில் பெருங்கவின் தொலைந்த நின்
நாள் துயர் கெடப் பின் நீடலர் மாதோ
ஒலி கழை நிவந்த ஓங்கு மலைச் சாரல்
புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை
ஆறு செல் மாக்கள் சேக்கும்
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
-பூங்கண்ணனார்.
விழுமிது - சிறந்தது. அணை - படுக்கை. நீடலர் - நீட்டிக்க மாட்டார். கழை - மூங்கில். நிவந்த - உயர்ந்த. புகா - உணவு. உறுத்த - உட்செலுத்திய. புலவு - புலால். அளை - குகை. ஆறு - வழி. சேக்கும் - தங்கும். கோடு - சிகரம். பிறங்கல் - விளங்கும். இறத்தல் - கடந்து செல்லுதல்.
தலைவன் பொருள் தேடிப் போயிருக்க, அவன் பிரிவினைத் தாங்காது வருந்திய தலைவிக்கு, தோழி ஆறுதல் சொன்னது.
நீ படும் துன்பத்தை
கேட்டிருக்க மாட்டார் தோழி!
கேட்டிருப்பின்,
கிடைக்க வேண்டிய செல்வம்
கிடைக்காமல் போகும் என்றாலும்,
பஞ்சு நூல் பூப்படுக்கையில்
பேரழகு தொலைந்து
நீ நாள்தோறும் படுகின்ற துயரம்
அழியும்படி திரும்பி வரும் காலத்தை
நீட்டிக்க மாட்டார்.
ஒலிக்கும் மூங்கில்கள் நிறைந்த, உயர்ந்த மலைச்சாரலில்
புலி உணவு சேர்த்து வைத்த
புலால் நாறும் குகையில்
(வேறிடம் கிடைக்காமல்)
வழிப்போக்கர்கள் தங்கிச் செல்லும்,
நெடுஞ்சிகர மலைகளைக் கடந்து சென்றவர்.
