குறிஞ்சி - தோழி கூற்று
பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்து
உரவுக் களிறு போல் வந்து இரவுக் கதவு முயறல்
கேளேம் அல்லேம் கேட்டனெம் பெரும
ஓரி முருங்கப் பீலி சாய
நன்மயில் வலைப்பட்டாங்கு யாம்
உயங்குதொறு முயங்கும் அறன் இல் யாயே.
-கண்ணனார்.
துஞ்சும் - தூங்கும். யாமம் - நள்ளிரவு. உரவு - வலிமை. களிறு - யானை. முயறல் - முயற்சி. ஓரி - கொண்டை. முருங்க - அழிய. சாய்தல் - மெலிதல். உயங்குதல் - அசைதல். முயங்குதல் - தழுவுதல். யாய் - தாய்.
தலைவியை சந்திக்க விரும்பி நள்ளிரவில் வந்த தலைவன் வாயில் புறத்தே நிற்கும்போது, தோழி சொன்னது.
எல்லோரும் தூங்கும் நள்ளென்ற நடுச்சாமத்தில்
வலிமையான யானை போல் வந்து
நீ கதவைத் திறக்க முயலும் ஒலியை
கேட்காமல் இல்லை.
கேட்டோம் தலைவனே.
கொண்டை முறிய, தோகை நசுங்க
வலையில் அகப்பட்ட மயில் போல உள்ளோம்.
நாங்கள் அசையும் போதெல்லாம்
இறுக்கித் தழுவுகிறாள்
அறமற்ற அன்னை.
Tuesday, May 30, 2023
குறுந்தொகை 244 - அறனில் யாயே
குறுந்தொகை 242 – சேந்துவரல் அறியாது செம்மல் தேர்
முல்லை - செவிலித்தாய் கூற்று
கானங்கோழிக் கவர்குரல் சேவல்
ஒண்பொறி எருத்தின் தண்சிதர் உறைப்பப்
புதல் நீர் வாரும் பூ நாறு புறவில்
சீறூரோளே மடந்தை வேறு ஊர்
வேந்து விடு தொழிலோடு செலினும்
சேந்து வரல் அறியாது செம்மல் தேரே.
-குழற்றத்தானார்
கவர்த்த - கிளைத்த. ஒண் - ஓளிரும். பொறி - புள்ளி. எருத்து - கழுத்து. தண் - குளிர்ந்த. சிதர்- நீர்த்துளி. புதல் - புதர். வாரும் - ஒழுகும். புறவு - முல்லை நிலம். சேந்து வரல் - தங்கியிருந்து பிறகு திரும்புதல்.
திருமணமான மகள் வீட்டுக்குச் சென்று திரும்பிய செவிலித்தாய், பெற்ற அன்னைக்குச் சொல்லியது.
காட்டுக்கோழிகள் பல சேர்ந்து
ஒன்றாய் ஒலித்தது போன்ற குரலுடைய சேவல்.
அதன் ஒளிரும் புள்ளிகள் கொண்ட கழுத்தின் மேல்
குளிர்ந்த நீர்த்துளிகள் சொட்டித் தெறிக்கும்படி
புதரில் இருந்து நீர் ஒழுகும்
பூமணம் வீசும் முல்லை நிலம்.
அங்கு ஒரு சிறிய ஊரில் வாழ்கிறாள் அவள்.
அயல் ஊருக்கு
அரசனிட்ட பணியைச் செய்யச் சென்றால் கூட
இரவு தங்கி மறுநாள் வருவது
என்பதை அறியாதது
தலைவனின் தேர்.
குறுந்தொகை 240 - மாலை மறையும் மணிநெடுங்குன்று
முல்லை - தலைவி கூற்று
பனிப் புதல் இவர்ந்த பைங்கொடி அவரைக்
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பல் மலர்
வெருக்குப் பல் உருவின் முல்லையொடு கஞலி
வாடை வந்ததன் தலையும் நோய் பொரக்
கண்டிசின் வாழி தோழி தெண் திரைக்
கடல் ஆழ் கலத்தின் தோன்றி
மாலை மறையும் அவர் மணி நெடுங் குன்றே.
- கொல்லன் அழிசியார்.
பனி - குளிர்ந்த. புதல் - புதர். இவர்தல் - படர்தல். வெருகு - காட்டுப்பூனை. கஞலி - நிறைந்து. வாடை – வாடைக்காலம். தலையும் - பிறகும். பொருதல் - அலைமோதுதல். கலம் - கப்பல்.
தலைவன் கார் காலத்தே திரும்பி வருவதாகச் சொல்லிவிட்டுப் பொருள் தேடிச் சென்றிருக்க, கார் காலம் முடிந்து வாடைக் காலம் தொடங்கியும், அவன் வரத் தாமதம் ஆனபோது, தோழியிடம் தலைவி சொன்னது.
குளிர்ந்த புதரில் படர்ந்த அவரைக் கொடியில்
கிளிவாய் போன்ற ஒளி வீசும் மலர்கள் பூத்தன.
முல்லைக்கொடியில்
காட்டுப்பூனையின் பல் போன்ற பூக்கள் நிறைந்தன.
வாடைக்காலமும் வந்தது.
நெஞ்சில் துயரம் அலைமோதுகிறது.
காண்பாய் தோழி!
கடலில் மறையும் கப்பல் போல,
மாலைப் பொழுது வந்ததும் மறைகிறது
அவர் கடந்து சென்ற
மணிநெடுங் குன்று.
குறுந்தொகை 238 - கொண்டனை சென்மோ நின் சூளே
மருதம் - தோழி கூற்று
பாசு அவல் இடித்த கருங் காழ் உலக்கை
ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணைத் துயிற்றி
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும்
தொண்டி அன்ன என் நலம் தந்து
கொண்டனை சென்மோ மகிழ்ந நின் சூளே.
-குன்றியனார்.
பாசு - பசுமை. காழ் - வயிரம். ஆய் - அழகு. வரம்பு - வரப்பு. துயிற்றி - படுக்க வைத்து. ஒண் - ஒளிரும். தொடி - வளையல். வண்டல் - ஒரு வகை விளையாட்டு. அயர்தல் - விளையாடுதல். தொண்டி - சேரர் துறைமுகம். மகிழ்நன் - மருத நிலத் தலைவன். சூள் - சத்தியம்.
தலைவியைப் பிரிந்து பரத்தையிடம் சென்றிருந்த தலைவன், மீண்டும் தலைவியோடு சேர விரும்பி, "இனிப் பிரியேன்" எனச் சத்தியம் செய்து, சேர்த்து வைக்குமாறு வேண்டியபோது, தோழி சொன்னது.
பச்சை அவலை இடித்த
கரிய, வயிரம் பாய்ந்த உலக்கையை
நெல் வரப்பில் சாய்த்துவிட்டு
ஒளிரும் வளையல் அணிந்த மகளிர்
வண்டல் விளையாடும்
தொண்டிப் பட்டினம்.
அப்பட்டினம் போலச் சிறந்து இருந்த
தலைவியின் பெண்மை நலத்தைத்
திரும்பத் தந்துவிட்டு,
தூக்கிக் கொண்டு போ தலைவனே!
உன் சத்தியத்தை.
குறுந்தொகை 237 - முயக்கிடை மலைவே
பாலை - தலைவன் கூற்று
அஞ்சுவது அறியாது அமர்துணை தழீஇய
நெஞ்சு நப்பிரிந்தன்று ஆயினும் எஞ்சிய
கை பிணி நெகிழின் அஃதெவனோ நன்றும்
சேய அம்ம இருவாம் இடையே
மாக்கடல் திரையின் முழங்கி வலன் ஏர்பு
கோட்புலி வழங்கும் சோலை
எனைத்தென்று எண்ணுகோ முயக்கிடை மலைவே.
-அள்ளூர் நன்முல்லையார்.
அமர் - விருப்பம். தழீஇய - தழுவும் பொருட்டு. நப்பிரிந்தன்று - நம்மைப் பிரிந்தது. பிணி - அணைத்தல். சேய்மை - தொலைவு. அம்ம - அசைச் சொல். இருவாம் - இருவருக்கும். மா - கரிய. திரை - அலை. வலன் - வலிமை. ஏர்பு - எழுந்து. கோள் - கொலை. முயக்குதல் - தழுவுதல். மலைவு - தடைகள்.
தலைவியைப் பிரிந்து பொருள் தேடிச் சென்றிருந்த தலைவன், ஈட்டிய பொருளோடு திரும்பி வரும் போது, ஊர் செல்ல இன்னும் நெடுந்தொலைவு இருப்பதை எண்ணி, தேர்ப்பாகனுக்குச் சொன்னது.
அச்சம் என்பது அறியாமல்,
நம் விருப்பத்திற்குரிய தலைவியைத் தழுவ
நெஞ்சம் நம்மைப் பிரிந்து சென்றது.
எஞ்சியிருக்கும் கைககள் அணைக்க முடியாமல்
நெஞ்சம் மட்டும் தழுவிப் பயன் என்ன!
நெடுந்தொலைவு இருவருக்கும் இடையே.
கருங்கடல் அலை போல் முழங்கி
வலிமையோடு எழுந்து
கொல்லும் புலிகள் உலாவும் சோலைகள்.
எத்தனை என்று எண்ணுவேன்!
அவளை அணைப்பதற்கு
இடையே இருக்கும் தடைகள்.
குறுந்தொகை 234 - பெரும்புலர் விடியலும் மாலை
முல்லை - தலைவி கூற்று
சுடர் செல் வானம் சேப்பப் படர் கூர்ந்து
எல் அறு பொழுதின் முல்லை மலரும்
மாலை என்மனார் மயங்கியோரே
குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும்
பெரும் புலர் விடியலும் மாலை
பகலும் மாலை துணையிலோர்க்கே.
-மிளைப் பெருங் கந்தனார்
சுடர் - கதிரவன். சேப்ப - சிவப்ப. படர் - துன்பம். எல் - ஒளி. குடுமி - கொண்டை.
தலைவனைப் பிரிந்திருந்த தலைவி வருந்திச் சொன்னது.
கதிரவன் மறைய
வானம் சிவக்க
துயரம் மிகுந்து
ஒளி மங்கி
முல்லை மலரும் பொழுதை
மாலை என்பர் அறிவு மயங்கியோர்.
கொண்டைக் கோழி நெடிய நகரத்தில் கூவுகின்ற
பேரிருள் விலகும்
விடியலும் மாலை.
பகலும் மாலை.
துணைவரைப் பிரிந்தவர்க்கு.
குறுந்தொகை 233 - வரைகோள் அறியாச் சொன்றி
முல்லை - தலைவன் கூற்று
கவலை கெண்டிய அகல்வாய்ச் சிறு குழி
கொன்றை ஒள் வீ தாஅய் செல்வர்
பொன் பெய் பேழை மூய் திறந்தன்ன
கார் எதிர் புறவினதுவே உயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும்
வரைகோள் அறியாச் சொன்றி
நிரை கோல் குறுந்தொடி தந்தை ஊரே.
-பேயனார்
கவலை - ஒரு கிழங்கு. கெண்டிய - தோண்டிய. கொன்றை - ஒரு மலர். ஒள் - ஒளி பொருந்திய. வீ - மலர். தாஅய் - பரவிய. பேழை - பெட்டி. மூய் - மூடி. கார் - கார் காலம் . புறவு - முல்லை நிலம். மிச்சில் - எஞ்சியது. வரைகோள் - எல்லை. சொன்றி - சோறு. நிரை - வரிசை. கோல் - திரண்ட. தொடி - வளையல்.
திருமணத்திற்காகப் பொருள் தேடிச் சென்ற தலைவன், பொருளோடு திரும்பும் போது, தலைவியின் ஊர் தென்பட்டதும், பாகனுக்குச் சுட்டிக் காட்டிச் சொன்னது.
கவலைக் கிழங்கைத் தோண்டி எடுத்ததால் உண்டான
அகன்ற வாயுடைய சிறு குழியில்
ஒளிரும் கொன்றை மலர்கள் உதிர்ந்து கிடக்கின்றன.
அது செல்வந்தரின் பொன் நகைப்பெட்டியை
மூடியினைத் திறந்து வைத்ததைப் போல் தோன்றுகிறது.
அத்தகு கார்கால முல்லை நிலத்திடையே உள்ளது.
உயர்ந்தோர்க்கு நீர்சொரிந்து
தானம் செய்தபின் எஞ்சியதையும்
யாவர்க்கும் கொடுக்க
அளவில்லாச் சோற்றையும் கொண்ட
வரிசையாக சிறுவளையல்கள் அணிந்த
அவளின் தந்தையின் ஊர்.
குறுந்தொகை 228 - திரை வந்து பெயரும்
நெய்தல் - தலைவி கூற்று
வீழ் தாழ் தாழை ஊழ்உறு கொழு முகை
குருகு உளர் இறகின் விரிபு தோடு அவிழும்
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்
திரை வந்து பெயரும் என்ப நத்துறந்து
நெடுஞ் சேண் நாட்டார் ஆயினும்
நெஞ்சிற்கு அணியர் தண் கடல் நாட்டே.
-செய்தி வள்ளுவர் பெருஞ்சாத்தனார்
வீழ் - விழுது. தாழ் - தாழ்ந்த. தாழை - தாழை மரம். ஊழுறு - முற்றிய. முகை - மொட்டு. குருகு - நாரை. உளர் - கோதிய. தோடு - மடல். முன்றில் - முற்றம். திரை - அலை. சேண் - தொலைவு. அணியர் - நெருங்கியவர்.
தலைவன் பொருள் தேடிப் போயிருக்க, அவன் பிரிவை எப்படித் தாங்குகிறாய் என்று கேட்ட தோழிக்கு, தலைவி சொன்னது.
விழுதுகள் வளர்ந்த தாழை மரம்.
அதன் முற்றிய வளமான மொட்டுகள்
நாரை தன் சிறகுகளைக் கோதுவதைப் போல
மடலாக விரிந்து மலர்கின்ற
சோலைகள் சூழ்ந்தது நம் கடற்கரைச் சிற்றூர்.
நம் வீட்டு முற்றத்திற்கு வெளியே
கடலலைகள் கரையில் மோதி விட்டு
திரும்பிச் செல்கின்றன.
நம்மைத் துறந்து
நெடுந்தொலைவு நாட்டில் உள்ளவர் ஆயினும்
நமது நெஞ்சுக்கு நெருக்கமாகவே இருப்பவர் வசிக்கும்
அந்தக் கடற்கரை நாட்டில் இருந்து.
குறுந்தொகை 221 - முல்லையும் பூத்தன
முல்லை - தலைவி கூற்று
அவரோ வாரார் முல்லையும் பூத்தன
பறியுடைக் கையர் மறி இனத்து ஒழியப்
பாலொடு வந்து கூழொடு பெயரும்
ஆடுடை இடைமகன் சென்னிச்
சூடிய எல்லாம் சிறுபசு முகையே.
-உறையூர் முதுகொற்றனார்
பறி - பனையோலைக் குடை. மறி - ஆட்டுக்குட்டி.
ஒழிதல் - தங்குதல். கூழ் - உணவு. சென்னி - தலை.
பசுமுகை - புது மொட்டு.
தலைவன் கார் காலத்தே திரும்பி வருவதாகச் சொல்லிவிட்டுப் பொருள் தேடிச் சென்றிருக்க, கார் காலம் தொடங்கியும், அவன் வரத் தாமதம் ஆனபோது, தோழியிடம் தலைவி சொன்னது.
அவரோ இன்னும் வரவில்லை.
(கார் காலத்து மலரும்)
முல்லை மலர்களும் பூத்தன.
ஆட்டு மந்தையோடு இரவு தங்கும் பொருட்டு,
பால் ஊற்றி விட்டு
அதற்கு ஈடாக, உணவு பெற்றுக் கொண்டு செல்லும்
பனையோலைக் குடை ஏந்திய இடையர்கள்
தலையில் சூடியுள்ளவை எல்லாம்
சிறிய புது முல்லை மொட்டுக்கள்.
குறுந்தொகை 218 - விறல்கெழு சூலி
பாலை - தலைவி கூற்று
விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்குக்
கடனும் பூணாம் கைந் நூல் யாவாம்
புள்ளும் ஓராம் விரிச்சியு நில்லாம்
உள்ளலும் உள்ளாம் அன்றே தோழி
உயிர்க்கு உயிர் அன்னர் ஆகலின் தம் இன்று
இமைப்பு வரை அமையா நம் வயின்
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர்மாட்டே.
-கொற்றனார்
விடர் முகை - பிளவுபட்ட குகை. அடுக்கம் - மலை. விறல் - வீரம். சூலி - கொற்றவை. கடன் - பலி. கைந்நூல் - காப்பு. யாத்தல் - கட்டுதல். புள் - சகுனம். ஓர்தல் -ஆராய்தல். விரிச்சி - குறிகேட்டல். உள்ளுதல் - நினைத்தல். அன்று - அசைச்சொல். இமைப்பு வரை - இமைப்பொழுதும். ஆண்டு - அங்கு. அமைதல் - தங்குதல்.
தலைவன் பொருள் தேடிப் போயிருக்க, அவன் பொருட்டு சூலிக்கு வழிபாடுகள் செய்து வந்த தலைவி, அவன் திரும்பி வரத் தாமதம் ஆனபோது, தோழியிடம் சொன்னது.
பிளவுண்ட குகைகள் நிறைந்த மலை மீது உறையும்
வீரம் மிக்க சூலிக்கு
பலி கொடுக்க மாட்டோம்.
கையில் காப்பு கட்ட மாட்டோம்.
அவளிடத்தில் சகுனம் பாரோம்.
குறிகேட்டு நிற்கப் போவதில்லை.
அவளை நினைக்கவும் மாட்டோம், தோழி!
உயிர்க்கு உயிர் போன்றவர்.
இமைப்பொழுதும் பிரிய மாட்டாத நம்மை மறந்து
சென்ற இடத்திலேயே தங்கிவிட வல்லவர் பொருட்டு.
Friday, May 26, 2023
குறுந்தொகை 210 - காக்கையது பலி
முல்லை - தோழி கூற்று
திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆப் பயந்த நெய்யில் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண் நெல் வெஞ்சோறு
ஏழு கலத்து ஏந்தினும் சிறிது என் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே
-காக்கை பாடினியார் நச்செள்ளையார்
கானம் - காடு. அண்டர் - இடையர். ஆ - பசு. முழுதுடன் - முற்றிய. விருந்து - விருந்தினர். செல்லல் - துன்பம்.
பொருள் தேடித் போயிருந்த தலைவனின் பிரிவால் தலைவி வருந்தியிருந்த பொழுதில், காகம் கரைந்ததை, அவன் திரும்பி வருவதற்கான சகுனமாகக் கருதிய தோழி சொன்னது.
வலிமையான தேர்கொண்ட
நள்ளியின் காட்டில் மேயும்
இடையர்தம் பசுக்கள் பயந்த நெய்யில்,
தொண்டிப் பட்டினத்தில் முற்றி விளைந்த
வெண் நெல்லின் சுடு சோற்றினைக் கலந்து,
ஏழு கிண்ணங்களில் ஏந்தித் தந்தாலும்
குறைவுதான்.
என் தோழியின் பெருந்தோள்களை மெலியச் செய்த
பிரிவுத் துன்பத்தைப் போக்க வல்ல
விருந்தினர் (தலைவன்) வருமாறு கரைந்த
காகத்திற்குப் பலியாக.
நள்ளி - கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய கோப்பெரு நள்ளி. தொண்டி - சேரர்களின் துறைமும். காக்கை - காகம் கரைந்தால் விருந்தினர் வருவார் என்பது தொல்காலம் தொட்டு இருந்து வரும் நம்பிக்கை.
குறுந்தோகை 209 - மையிருங் கூந்தல் மடந்தை நட்பு
பாலை - தலைவன் கூற்று
அறம் தலைப்பட்ட நெல்லி அம் பசுங் காய்
மறப் புலிக் குருளை கோள் இடம் கறங்கும்
இறப்பு அருங் குன்றம் இறந்த யாமே
குறுநடை பல உள்ளலமே நெறிமுதல்
கடற்றில் கலித்த முடச் சினை வெட்சி
தளை அவிழ் பல் போது கமழும்
மை இருங் கூந்தல் மடந்தை நட்பே.
-பாலை பாடிய பெருங்கடுங்கோ
மறம் - வலிமை. குருளை - குட்டி. கோள் - கொள்ளுதல். கறங்கும் - உருளும். இறத்தல் - கடத்தல். கடறு - காடு. உள்ளுதல் - நினைத்தல். நெறி - பாதை. கடறு - காடு. கலித்த - மலர்ந்த. முடச்சினை - வளைந்த கிளை. வெட்சி - ஒரு மலர். போது - அரும்பு. மை - கருமை. நட்பு - காதல்.
பொருள் ஈட்டித் திரும்பிய தலைவன், வீட்டு வாயிலில், தோழிக்குச் சொன்னது.
(வழிப்போக்கர்களின் பசி போக்குவதான)
அறத்தைச் செய்யும்
நெல்லி மரத்தின் பசுங்காய்களை
வலிமையான புலிக்குட்டிகள் உருட்டி விளையாடும்,
கடத்தற்கரிய மலைகளைக் கடந்து சென்றோம்.
சிற்றடி வைத்து நடக்கும் தோழியே!
சென்றவிடத்து
வேறு எதையும் நினைக்கவில்லை.
உள்ளத்தில் இருந்தது,
கடந்து சென்ற காட்டுப்பாதையில் மலர்ந்த
வளைந்தகிளை வெட்சியின்
முறுக்கவிழ்ந்த பூக்களால் மணக்கும்,
மைநிறக் கூந்தல் மடந்தையின்
காதல் மட்டுமே.
குறுந்தொகை 207 - இனம்தீர் பருந்து
பாலை - தலைவி கூற்று
செப்பினம் செலினே செலவு அரிது ஆகும் என்று,
அத்த ஓமை அம் கவட்டு இருந்த
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி
சுரம் செல் மாக்கட்கு உயவுத் துணை ஆகும்
கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி
நல் அடி பொறிப்பத் தாஅய்ச்
சென்றெனக் கேட்ட நம் ஆர்வலர் பலரே
- உறையனார்
செப்புதல் - சொல்லுதல். செலவு - பிரிவு. அரிது - கடினம். அத்தம் - கடினமான பாதை. ஓமை - பாலை நிலைத்து ஒரு வகை மரம். கவடு - கிளை. தீர்ந்த - பிரிந்த. புலம்பு - தனிமை. விளி - ஒலி. சுரம் - பாலை நிலம். உயவுத்துணை - வழித்துணை. கல் - பாறை. வரை - மலை. நெறி - வழி. தாஅய் - விரைந்து.
தலைவியிடம் சொல்லாமலே தலைவன் பொருள் தேடிச் சென்றுவிட, பிரிவுத் துயரில் தலைவி சொன்னது.
சொல்லிவிட்டுச் சென்றால் பிரிவது கடினம் என்று,
ஓமை மரக்கிளை மீதிருந்து
துணையைப் பிரிந்த பருந்து எழுப்பும் சோகக் குரல்
பாலைநிலத்து வழிப்போக்கர்க்கு
வழித்துணையாக விளங்கும்,
தொன்மையான மலையடிப் பாதை வழியே
காலடித் தடம் பதிய, விரைவாகச் சென்றார்
என்று கேள்விப்பட்டனர்
நம்மீது அன்பு கொண்ட பலர்.
குறுந்தொகை 201 - அமிழ்தம் உண்க
குறிஞ்சி - தலைவி கூற்று
அமிழ்தம் உண்க நம் அயல் இல் ஆட்டி
பால் கலப்பன்ன தேக் கொக்கு அருந்துபு
நீல மென் சிறை வள் உகிர்ப் பறவை
நெல்லி அம் புளி மாந்தி அயலது
முள் இல் அம் பணை மூங்கில் தூங்கும்
கழை நிவந்து ஓங்கிய சோலை
மலைகெழு நாடனை வரும் என்றாளே.
-பெயர் தெரியவில்லை
இல் - இல்லம். ஆட்டி - பெண். கொக்கு - மாம்பழம். சிறை - சிறகு. வள் - கூரிய. உகிர் - நகம். வள் உகிர்ப் பறவை - வௌவால். மாந்துதல் - உண்ணுதல். பணை - பருத்த. கழை - மூங்கில். நிவந்த - ஓங்கிய.
அமிழ்தம் உண்க!
நம் அயல் வீட்டுப் பெண்.
பால் கலந்தது போன்ற இனிய மாம்பழத்தை உண்ட
நீல மென் சிறகும், கூர்நகமும் கொண்ட வெளவால்
புளிப்பான நெல்லிக்காயைத் தின்று விட்டு
பருத்த, முள்ளில்லா மூங்கிலில் தூங்கும்.
அப்படிப்பட்ட மூங்கில் சோலைகள் உயர்ந்தோங்கிய
மலை நாட்டினைச் சேர்ந்த தலைவன்
(திருமணம் செய்ய)
வரப் போகிறான் என்றாளே.
குறுந்தொகை 199 - திண் தேர்க் கைவள் ஓரி
பாலை - தலைவன் கூற்று
பெறுவது இயையாது ஆயினும் உறுவது ஒன்று
உண்டுமன் வாழிய நெஞ்சே திண் தேர்க்
கை வள் ஓரி கானம் தீண்டி
எறிவளி கமழும் நெறிபடு கூந்தல்
மை ஈர் ஓதி மாஅயோள் வயின்
இன்றை அன்ன நட்பின் இந் நோய்
இறு முறை என ஒன்று இன்றி
மறுமை உலகத்து மன்னுதல் பெறினே.
-பரணர்
உறுவது - பயன்தருவது. வள் - வள்ளல். வளி - காற்று. ஓதி - கூந்தல். மா - கருமை. வயின் - இடத்தில். இறுதல் - அழிதல். மன்னுதல் - நிலைத்தல்.
தலைவியின் காதலை அறிந்த பெற்றோர், அவளை வீட்டில் சிறை வைத்து விட, தலைவன் தன் நெஞ்சுக்குச் சொன்னது.
தலைவியைப் பெறுவது இனி இயலாது
என்றாலும்
நம் காதலால், பயன் ஒன்று உண்டு நெஞ்சே!
வலிமையான தேர் கொண்ட
வள்ளல் ஓரியின் காட்டைக் கடந்து வரும்
காற்றைப் போல மணக்கும்
அடர்ந்த கருங்கூந்தல் கொண்ட
கரிய மேனியளின் நட்பினால் உண்டான
இந்தக் காதல் நோய்
இப்பிறப்போடு அழிந்து விடாது.
மறு பிறப்பிலும் தொடரும்.
ஓரி - கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி.
குறுந்தொகை 198 - வருகுவள் யாயே
குறிஞ்சி - தோழி கூற்று
யாஅம் கொன்ற மரம் சுட்டு இயவில்
கரும்பு மருள் முதல பைந்தாள் செந்தினை
மடப் பிடித் தடக்கை அன்ன பால் வார்பு
கரிக் குறட்டு இறைஞ்சிய செறிகோள் பைங்குரல்
படுகிளி கடிகம் சேறும் அடுபோர்
எஃகு விளங்கு தடக்கை மலையன் கானத்து
ஆரம் நாறும் மார்பினை
வாரற்க தில்ல வருகுவள் யாயே.
-கபிலர்.
யா - யா மரம். கொன்ற - வெட்டிய. சுடுதல் - எரித்தல். இயவு - காடு. மருள் - போல. தாள் - அடிப்பாகம். தினை - foxtail millet. பிடி - பெண்யானை. கரிக்குறடு - கொல்லர் கரி எடுக்கப் பயன்படுத்தும் குறடு. இறைஞ்சிய - வளைந்த. செறிகொள் - முற்றிய. குரல் - தினைக்கதிர். கடிதல் - விரட்டுதல். ஆரம் - சந்தனம். யாய் - தாய்.
வழக்கமகச் சந்திக்கும் இடம் பாதுகாப்பற்றது என்றும், அதற்குப் பதிலாக, தோட்டத்தில் தலைவியை சந்திக்கலாம் என்றும், தலைவனுக்குத் தோழி சொன்னது.
யா மரங்களை வெட்டி எரித்த காட்டு நிலம்.
கரும்பு போனற அடிப்பாகம் கொண்ட சிவந்த தினைச்செடி..
யானைத் துதிக்கை போன்றும்
கரி வாரும் குறடு போன்றும் வளைந்த
பால் நிரம்பி முற்றிய பசுங்கதிர்கள்.
அவற்றைத் தின்ன வரும் இன்குரல் கிளிகளை விரட்ட
நாங்கள் தோட்டத்துக்குப் போகின்றோம்.
பகைவரைக் கொல்லும் வாளேந்திய
வலிமையான கைகளைப் பெற்ற
மலையனின் காட்டில் விளைந்த
சந்தனம் மணக்கும் மார்பினைக் கொண்டவனே!
இனி இங்கு வராதே!
வருவாள் தாய்.
மலையன் - கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய மலையமான் திருமுடிக்காரி.
குறுந்தொகை 193 - முல்லை முகை நாறும்மே
முல்லை - தலைவி கூற்று
மட்டம் பெய்த மணிக் கலத்தன்ன
இட்டு வாய்ச் சுனைய பகுவாய்த் தேரை
தட்டைப் பறையின் கறங்கு நாடன்
தொல்லைத் திங்கள் நெடு வெண்ணிலவின்
மணந்தனன் மன் எம் தோளே
இன்றும் முல்லை முகை நாறும்மே.
-அரிசில் கிழார்
மட்டம் - கள். கலம் - பாத்திரம். இட்டு - குறுகிய. சுனை - நீரூற்று. பகுவாய் - பிளந்த வாய். தட்டைப் பறை - கிளிவிரட்டப் பயன்படத்தப்படும் பறை. கறங்கும் - ஒலிக்கும். தொல்லை - முன்பொரு. மணத்தல் - தழுவுதல். முகை - மொட்டு.
கள் குடுவை போன்று
குறுகிய வாய்கொண்ட சுனையில்
பிளந்தவாய்த் தேரை
தட்டைப் பறை போல ஒலி எழுப்பும்
நாட்டைச் சேர்ந்த தலைவன்.
முன்பொரு நாள்
முழுவெண் நிலவொளியில்
என் தோள்களைத் தழுவினான்.
(அவன் அணிந்திருந்த மாலையின்)
முல்லைப்பூ இன்றும் மணக்கிறது.
குறுந்தொகை 189 - இன்றே சென்று வருவது நாளை
பாலை - தலைவன் கூற்று
இன்றே சென்று வருவது நாளைக்
குன்று இழி அருவியின் வெண்தேர் முடுக
இளம்பிறை அன்ன விளங்குசுடர் நேமி
விசும்புவீழ் கொள்ளியிற் பைம்பயிர் துமிப்பக்
கால் இயல் செலவின் மாலை எய்திச்
சில்நிரை வால் வளைக் குறுமகள்
பல் மாண் ஆகம் மணந்து உவக்குவமே.
-மதுரை ஈழத்துப் பூதன்தேவனார்
முடுக்க - விரைவாகச் செலுத்த. நேமி - சக்கரம். விசும்பு - வானம். துமிப்ப - அழிக்க. கால் - காற்று. நிரை - வரிசை. வால் - வெண்மை. ஆகம் - உடல். மணத்தல் - தழுவுதல்.
அரசன் இட்ட பணியைச் செய்ய, தலைவியைப் பிரிந்து செல்ல வேண்டி இருந்த தலைவன் சொன்னது.
இன்றே சென்று, நாளையே திரும்புவோம்!
குன்றிலிருந்து விழும் அருவி போன்று
வெண்ணிறத் தேர் விரைந்து செல்ல,
ஒளிரும் தேர்ச்சக்கரம்
மண்ணில் பாதி புதைந்து, இளம்பிறை போன்று தோன்ற,
அதிலிருந்து எழும் நெருப்புப் பொறிகள்
வானிலிருந்து விழும் கொள்ளி போலப்
பசும்பயிர்களைப் பொசுக்க,
காற்று போல் பறந்து சென்று
மாலையே ஊர் வந்து சேர்வோம்.
வரிசையாய் வெண் வளையல்கள் அணிந்த
அழகிய, சிறு பெண்ணைத் தழுவி மகிழ்வோம்
குறுந்தொகை 182 - பெண்ணை மா மடல்
குறிஞ்சி - தலைவன் கூற்று
விழுத்தலைப் பெண்ணை விளையல் மா மடல்
மணியணி பெருந்தார் மரபிற் பூட்டி
வெள் என்பு அணிந்து பிறர் எள்ளத் தோன்றி
ஒருநாள் மருங்கில் பெருநாண் நீக்கித்
தெருவின் இயலவும் தருவது கொல்லோ
கலிழ்கவின் அசைநடைப் பேதை
மெலிந்திலள் நாம் விடற்கு அமைந்த தூதே.
-மடல் பாடிய மாதங்கீரனார்
விழு - சிறந்த. பெண்ணை - பனை. விளையல் - முதிர்ந்த. மா - குதிரை. மடல் – பனையோலை. தார் - மாலை. என்பு - எலும்பு. மருங்கு - பக்கம். நாண் - நாணம். இயலுதல் - இழுக்கப்படுதல். கலிழ்தல் - ஒழுகுதல். கவின்- அழகு. மெலிதல் - இரங்குதல்.
தன் காதலை தலைவி ஏற்காதலால், மடலேறப் போவதாக தலைவன் சொன்னது.
அழகிய உச்சியைப் பெற்ற பனை மரத்தின்
முதிர்ந்த மடலால் குதிரை செய்து,
அதற்கு மணிமாலை சூட்டி
அதன் மேல் ஏறி
வெண்ணிற எலும்பு மாலை அணிந்து
ஊரார் ஏளனம் செய்ய, வெட்கம் விட்டு
தெருவில் இழுத்துச் செல்லப்படவும் வேண்டுமோ!
அழகு மிளிரும், அசைந்த நடை கொண்ட அவள்
இரங்கவில்லையே!
நாம் விடுத்த தூதிற்கு.
மடலேறுதல் - பல விதங்களில் முயன்றும், தலைவி காதலை ஏற்காதபோது, கடைசி உபாயமாகச் சொல்லப்படுவது மடல் ஏறுதல் என்பது. பனை மடலால் செய்யப்பட்ட குதிரை பொம்மையின் மீது ஏற்றப்பட்டு, ஊரார் நகைக்க, தலைவன் தெரு வழியே இழுத்துச் செல்லப்படுவான். இப்படிச் செய்தால், தலைவி மனம் இறங்குவாள் என்பது மரபு.
குறுந்தொகை 180 - ஒரு கழை நீடிய சுரன்
பாலை - தோழி கூற்று
பழூஉப் பல் அன்ன பரு உகிர்ப் பா அடி
இருங்களிற்று இன நிரை ஏந்தல் வரின் மாய்ந்து
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து
எய்தினர் கொல்லோ பொருளே அல்குல்
அவ்வரி வாடத் துறந்தோர்
வன்பர் ஆகத் தாம் சென்ற நாட்டே.
-கச்சிப்பேட்டு நன்னாகையார்.
பழு - பேய். பரு - பருத்த. உகிர் - நகம். பா - பரந்த. இரு - பெரிய. களிறு - யானை. இனம் - கூட்டம். நிரை - வரிசை. ஏந்தல் - தலைவன். மாய்ந்து - அழிந்து. அறை - பாத்தி. கண் - கணு. பைதல் - துன்பம். கழை - மூங்கில். சுரன் – பாலைநிலத்துப் பாதை. இறத்தல் - கடத்தல். அல்குல் - இடை. வரி - தேமல். வன்பர் - வன்னெஞ்சர்.
பொருள் தேடிச் சென்ற தலைவனின் பிரிவால் வருந்தியிருந்த தலைவியிடம், தோழி சொன்னது.
பேய்ப்பல் போன்ற பெரிய நகங்களும்
பரந்த பாதங்களும் உடைய யானைகளின் கூட்டம்.
அக்கூட்டத்துத் தலைவன் மிதித்ததால்
பாத்தியில் முறிந்து வீழ்ந்த கரும்புகள்.
அவற்றின் கணுக்களுக்கு இடையில் இருக்கும்
கரும்புத் துண்டின் உயரம் உள்ள
ஒற்றை மூங்கில் குருத்து மட்டுமே வளர்ந்த
வறண்ட பாலை நிலப் பாதை.
அந்தக் கொடிய பாதையைக் கடந்து போனவர்
எய்தினாரோ? தாம் தேடிச் சென்ற செல்வம்.
இவளது இடையின் தேமல் வாடும் படி
பிரிந்த சென்ற வன்னெஞ்சர்.
தாம் சென்ற நாட்டில்.
Wednesday, May 24, 2023
குறுந்தொகை 178 - தொழுது காண் பிறை
மருதம் - தோழி கூற்று
அயிரை பரந்த அம்தண் பழனத்து
ஏந்து எழில் மலர தூம்புடைத் திரள்கால்
ஆம்பல் குறுநர் நீர்வேட்டாங்கு இவள்
இடைமுலைக் கிடந்தும் நடுங்கலானீர்
தொழுது காண் பிறையின் தோன்றி யாம் நுமக்கு
அரியம் ஆகிய காலைப்
பெரிய நோன்றனிர் நோகோ யானே.
-நெடும்பல்லியத்தையார்.
அயிரை - ஒருவகை மீன். பரந்த - மிகுந்த. அம் - அழகிய. தண் - குளிர்ச்சி. பழனம் - நீர்நிலை. ஏந்து - உயர்ந்த. தூம்பு - துளை. திரள்கால் - திரண்ட தண்டு. ஆம்பல் – அல்லி. குறுநர் - பறிப்போர். நோன்றனிர் - வருந்தினீர்.
தலைவன்-தலைவி காதலித்துத் திருமணம் செய்த பிறகு, அவர்களைக் காண வந்த தோழி, தலைவனிடம் சொன்னது.
அயிரை மீன்கள் நிறைந்த அழகிய குளத்தில்
நீருக்கு மேலே உயரும் பூக்களும்
துளையுடைய தண்டும் கொண்ட அல்லிச் செடி.
அதன் மலர்களைப் பறிப்பவர்
(நீருக்குள்ளேயே இருந்தும்)
தாகம் அடைந்ததைப் போல,
(திருமணம் முடிந்து சேர்ந்து வாழும் இக்காலத்தில்)
இவள் முலைகளுக்கு நடுவிலேயே கிடந்தும்
காதல் வேட்கையால் நடுங்குகிறீர்.
(திருமணத்திற்கு முன்பு)
மக்கள் தொழும் மூன்றாம் பிறையைப் போன்று
நாங்கள் சந்திக்க அரிதாக இருந்த போது
துன்பத்தை எப்படிப் பொறுத்தீர்?
அதை எண்ணி வருந்துகிறேன்.
தொழுது காண் பிறை - காண்பதற்கு அரிய மூன்றாம் பிறை. மக்கள் இப்பிறையைத் தொழுதனர்.
குறுந்தொகை 174 - அருளே மன்ற ஆரும் இல்லதுவே
பாலை - தலைவி கூற்று
பெயல் மழை துறந்த புலம்பு உறு கடத்துக்
கவை முள் கள்ளிக்காய் விடு கடு நொடி
துதை மென் தூவித் துணைப் புறவு இரிக்கும்
அத்தம் அரிய என்னார் நம் துறந்து
பொருள் வயின் பிரிவாராயின் இனி இவ்வுலகத்துப்
பொருளே மன்ற பொருளே
அருளே மன்ற ஆரும் இல்லதுவே.
-வெண்பூதியார்
புலம்பு - தனிமை. கடம் - காடு. கவை - பிளந்த. நொடி - வெடிக்கும் ஒலி. துதை - அடர்ந்த. தூவி - சிறகு. புறவு - புறா. இரித்தல் - ஓடச் செய்தல். அத்தம் - பாலைநிலம். மன்ற - நிச்சயமாக. ஆரும் - யாரும்.
தலைவன் பொருள் தேடிப் பிரியப் போகின்றான் என்பதை தோழி மூலம் அறிந்த தலைவி வருந்திச் சொன்னது.
மழையற்ற, தனிமையான காட்டு வழி.
முள் மூடிய கள்ளிக்காய் பிளந்து வெடிக்கும் ஒலி
அடர்ந்த, மென்மையான சிறகுகள் கொண்ட
ஜோடிப் புறாக்களை வெருண்டு பறக்கச் செய்யும்
பாலை நிலம்.
அது கடத்தற்கரியது என்பதைக் கூட கருதாமல்,
நம்மைத் துறந்து
பொருள் தேடிப் பிரிவாராயின்,
இனி இவ்வுலகத்தே
பொருள் மட்டுமே முக்கியம் என்றாகும்.
அன்பினைப் போற்றுவோர்
யாரும் இல்லை என்றாகிவிடும்.
குறுந்தொகை 172 - உலை வாங்கு மிதி தோல்
நெய்தல் - தலைவி கூற்று
தா அம் சிறை நொப்பறை வாவல்
பழுமரம் படரும் பையுள் மாலை
எமியம் ஆக ஈங்குத் துறந்தோர்
தமியர் ஆக இனியர் கொல்லோ?
ஏழூர்ப் பொதுவினைக்கு ஓரூர் யாத்த
உலை வாங்கு மிதிதோல் போலத்
தலைவரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே.
-கச்சிப்பேட்டு நன்னாகையார்.
தா - வலிமை. அம் சிறை - அழகிய சிறகு. நொய்மை - மென்மை. பறை - பறத்தல். வாவல் - வௌவால். பையுள் - துன்பம். எமி - தனிமை. தமியர் - தனியர். வரம்பு - எல்லை.
திருமணத்திற்காகப் பொருள் தேடிச் சென்ற தலைவனின் பிரிவால் வருந்திய தலைவி, அவன் தனிமையில் எப்படி இருக்கிறானோ, என்று கவலைப் பட்டுச் சொன்னது.
வலிமையான அழகிய சிறகுகள் கொண்டு
மென்மையாய்ப் பறக்கும் வௌவால்கள்
பழுத்த மரங்களுக்குத் திரும்பும்
துன்பமான மாலைப் பொழுது.
எம்மைத் தனித்து விட்டுப் போனவர்
தம் தனிமையில் இன்பம் காண்பரோ?
ஏழு ஊர்களுக்குப் பொதுவாய்
ஓர் ஊரில் அமைக்கப்பட்ட
இரும்பு உலையின் மிதிபடும் துருத்தி போல
(எம் இருவரின் நிலையை எண்ணி)
வரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சு.
மிதிதோல் - துருத்தி. இரும்பு உலையில் காற்றடிக்கப் பயன்படும் தோல்பை (bellow).
குறுந்தொகை 169 - இறீஇயர் எம் உயிரே
மருதம் - தலைவி கூற்று
சுரஞ்செல் யானைக் கல் உறு கோட்டின்
தெற்றென இறீஇயரோ ஐய மற்றி யாம்
நும்மொடு நக்க வால்வெள் எயிறே
பாணர் பசுமீன் சொரிந்த மண்டைபோல
எமக்கும் பெரும் புலவு ஆகி
நும்மும் பெறேஎம் இறீஇயர் எம் உயிரே.
-வெள்ளிவீதியார்
தான் பரத்தையிடம் செல்லவில்லை என்று கூறி, தன்னை ஏற்கும் படி தலைவன் வேண்டியபோது, அதனை ஒப்பாமல், தன் உயிர் போவதே நல்லது என்று, கோபத்தில் தலைவி கூறியது.
சுரம் - பாலை நிலம். கல் - பாறை. கோடு - தந்தம். தெற்றென - விரைவாக. நகுதல் - சிரித்தல். எயிறு - பல். மண்டை - பாத்திரம். புலவு - புலால் நாற்றம், வெறுப்பு.
பாலை நிலத்துச் செல்லும் யானையின் தந்தம்
பாறையில் மோதியது போல,
பட்டென உடையட்டும், தலைவனே!
உம்மோடு சிரித்துப் பேசிய
எம் வெண் பற்கள்.
பாணர்கள் மீன் வைத்திருந்த பாத்திரம்
(புலால் நாற்றத்தால் வேறெதற்கும் பயன்படாமல் போவது)
போல,
எமக்கும் பெரும் வெறுப்பினைத் தந்து
உம்மையும் யாம் பெறாமல்
அழிந்து போகட்டும்
எம் உயிர்.
குறுந்தொகை 168 - மணத்தலும் தணத்தலும் இலமே
பாலை - தலைவன் கூற்று
மாரிப் பித்திகத்து நீர்வார் கொழு முகை
இரும் பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து
பெரும் பெயல் விடியல் விரித்து விட்டன்ன
நறுந் தண்ணியளே நன் மா மேனி
புனற் புணையன்ன சாயிறைப் பணைத்தோள்
மணத்தலும் தணத்தலும் இலமே
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே.
-சிறைக்குடி ஆந்தையார்
மாரி - மழை. பித்திகம் - பிச்சிப்பூ. முகை - மொட்டு. இரு – பெரிய. பனம் - பனை. பெயல் - மழை. நறுமை - மணம். தண் - குளிர்ச்சி. மா - மாமை நிறம். புனல் – வெள்ளம். புணை - தெப்பம். சாய்தல் - மெலிதல். இறை - மணிக்கட்டு. பணை - மூங்கில். மணத்தல் - தழுவுதல்.. தணத்தல் - பிரிதல்.
பொருள் தேடிச் செல்லத் துணிந்த நெஞ்சிற்கு, தலைவியைப் பிரிவதை எண்ணி, தலைவன் சொன்னது.
மழையில் தழைத்த பிச்சியின்
நீர் சொட்டும் அரும்புகளை,
பெரும்பசும் பனையோலைக் குடையில்
பொதிந்து வைத்து,
மழை தூறும் விடியலில்
இரைத்து விட்டதைப் போன்று
நறு மணம் கொண்டவள்.
குளிர்ச்சியானவள்.
மாமை நிறத்தினள்.
காதல் வெள்ளத்தைக் கடக்க உதவும் தெப்பம்.
மெல்லிய கைகள்.
மூங்கில் தோள்கள்.
அணைத்தல், பின்னர் பிரிதல் என்பது இயலாது.
பிரிந்த பின் உயிர் வாழ்தல்
அதனினும் இயலாதது.
குறுந்தொகை 157 - வாள் போல் வைகறை
மருதம் - தலைவி கூற்று
குக்கூ என்றது கோழி அதன் எதிர்
துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம்
தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே.
-அள்ளூர் நன்முல்லையார்
துட்கு - அச்சம். வைகறை - விடிகாலைப் பொழுது. தோய்தல் – தழுவுதல்.
குக்கூ என்று கூவியது கோழி.
அதைக்கேட்டு அச்சம் கொண்டது
என் தூய நெஞ்சம்.
என் தோள்களைத் தழுவியுள்ள
காதலரைப் பிரிக்கும்
வாள் போல
விடிகாலை வந்தது.
குறுந்தொகை 156 - எழுதாக் கற்பு
குறிஞ்சி - தலைவன் கூற்று
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கின் நல்நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே
எழுதாக் கற்பின் நின் சொலுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ மயலோ இதுவே
-பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
படிவம் - நோன்பு. புணர்த்தல் – சேர்த்தல்.
தலைவியின் நினைவாகவே இருக்கும் தலைவனுக்கு, அறிவுரை கூறிய தோழனிடம், தலைவன் சொன்னது.
பார்ப்பன மகனே!
செந்நிறப் பூக்கள் கொண்ட புரச மரக்கிளையின்
நார் நீக்கிச் செய்த தண்டமும்
தாழ இருக்கும் கமண்டலமும் ஏந்தி
நோன்பு உணவு உண்ணும் பார்ப்பன மகனே!
எழுதப்படாத வேதங்களைக் கற்ற
நீ சொல்லும் சொற்களுள்
பிரிந்தவரைச் சேர்க்கும்
மருந்து ஏதும் உண்டோ? கூறு.
வேறு மயக்கும் பேச்சுகள் வேண்டாம்.
முருக்கு - புரசம்; பலாசம். வேதச் சடங்குகள் செய்வோர் புரசமரத் தண்டினை ஏந்தி இருப்பர். கற்பு - கல்வி. எழுதாக் கற்பு - எழுதி வைக்காமல், வாய்மொழியாகவே பரப்பப்பட்ட வேதங்கள்.
குறுந்தொகை 155 - தேர் வருமென்னும் உரை வாராதே
முல்லை - தலைவி கூற்று
முதைப் புனம் கொன்ற ஆர்கலி உழவர்
விதைக் குறுவட்டி போதொடு பொதுளப்
பொழுதோ தான் வந்தன்றே மெழுகு ஆன்று
ஊதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி
மரம் பயில் இறும்பின் ஆர்ப்பச் சுரன் இழிபு
மாலை நனி விருந்து அயர்மார்
தேர் வரும் என்னும் உரை வாராதே.
-உரோடகத்துக் கந்தரத்தனார்
முதை - முதிய. புனம் - வயல். கொன்ற - உழுத. ஆர்கலி - ஆரவாரம். வட்டி - கூடை. போது - அரும்பு. பொதுள - நிறைய. பகுவாய் - பிளந்த வாய். தெண்மணி - தெளிந்த ஓசையுடைய மணி. இறும்பு - காடு. ஆர்த்தல் - ஒலித்தல். சுரன் - பாலை நிலம். அயர்தல் - செய்தல்.
பொருள் தேடிச் சென்றிருந்த தலைவன், திரும்பி வருவதாகக் கூறிய கார் காலம் வந்தும், அவன் இன்னும் வராததை எண்ணி, தலைவி வருந்திச் சொன்னது.
பழைய வயலை உழுத ஆரவாரம் மிக்க உழவர்கள்
காலையில் விதைகள் கொண்டு சென்ற கூடையில்,
மலர்கள் நிறைத்து வீடு திரும்பும்
மாலைப் பொழுது வந்தது.
மெழுகினால் செய்த அச்சில்
உலையில் ஊதி வடித்த
பிளந்த வாயை உடைய மணி,
மரங்கள் நிறைந்த காட்டில்
தெள்ளென ஒலிக்க,
பாலை நிலப் பாதையைக் கடந்து
மாலையில் நாம் நல் விருந்து சமைக்கும் படி
தேர் வருகின்றது
என்னும் சேதி வரவில்லை.
குறுந்தொகை 149 - காமம் நெரிதரக் கைந்நிலாவே
பாலை - தலைவி கூற்று
அளிதோ தானே நாணே நம்மொடு
நனி நீடு உழந்தன்று மன்னே இனியே
வான் பூங் கரும்பின் ஓங்கு மணற் சிறு சிறை
தீம்புனல் நெரிதர வீய்ந்து உக்கா அங்குத்
தாங்கும் அளவைத் தாங்கிக்
காம நெரிதரக் கைந்நில்லாவே.
-வெள்ளிவீதியார்
அளிது - இரங்கத்தக்கது. நாண் - நாணம். உழந்தன்று - வருந்தியது. வான் - வெண்மை. சிறை - பாத்தி. தீம்புனல் - வெள்ளம். வீய்ந்து - அழிந்து. உகுதல் - கரைதல்.
பெற்றோர் திருமணத்திற்குச் ஒப்புதல் தராததால், தலைவனுடன் உடன்போக தோழி அறிவுறுத்தியபோது, அதனை ஏற்கும் மனநிலையில் இருந்த தலைவி சொன்னது.
இரங்கத் தக்கது நாணம்.
நீண்ட காலம் நம்மோடு வருந்திக் கிடந்தது.
இனி,
வெண்ணிறப் பூக்கள் மலர்ந்த
கரும்பிற்கு இடப்பட்ட மண் பாத்தி
வெள்ளம் வந்து தாக்கும்போது
அழிந்து கரைவதைப் போல,
தாங்கும் வரைத் தாங்கிவிட்டு
காதல் நெருக்கும் போது
கைவிட்டு நீங்கும்.
குறுந்தொகை 146 - இன்று பெரிது
குறிஞ்சி - தோழி கூற்று
அம்ம வாழி தோழி நம் ஊர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ
தண்டுடைக் கையர் வெண்தலைச் சிதவலர்
நன்றுநன்று என்னும் மாக்களொடு
இன்று பெரிது என்னும் ஆங்கணது அவையே.
-வெள்ளிவீதியார்
புணர்தல் – சேர்தல். தண்டு – கைத்தடி. சிதவல் - தலைப்பாகை. பெரிது - பெருமை.
தலைவனின் சுற்றத்தார் தலைவியைப் பெண் கேட்டு, அவள் வீட்டுக்கு வந்திருக்க, அவையில் நடப்பதை தோழி தலைவிக்குச் சொன்னது.
தோழி, நீ வாழ்க!
நம்மூரில்
பிரிந்தோரைச் சேர்த்து வைப்போர் உள்ளனர்.
கையில் ஊன்றுகோல் கொண்டவர்.
நரைத்த தலையில் தலைப்பாகை அணிந்தவர்.
“நன்று நன்று”
எனச் சொல்லும் தலைவனின் சுற்றத்தாரோடு,
“நீங்கள் வந்ததால் இந்த நாள் பெருமை உடைத்து”
என்று கூறும் நம் உறவினர்களையும் கொண்டது
அந்த அவை.
Friday, May 12, 2023
குறுந்தொகை 145 - நெட்டிரா உடைத்தே
நெய்தல் - தலைவி கூற்று
உறைபதி அன்று இத்துறை கெழு சிறுகுடி
கானல் அம் சேர்ப்பன் கொடுமை எற்றி
ஆனாத் துயரமொடு வருந்திப் பானாள்
துஞ்சாது உறைநரொடு உசாவாத்
துயிற்கண் மாக்களொடு நெட்டிரா உடைத்தே.
-கொல்லன் அழிசியார்
கானல் - கடற்கரைச் சோலை. சேர்ப்பன் - நெய்தல் நிலத் தலைவன். எற்றுதல் - நினைத்தல். ஆனா - அடங்காத. பானாள் - நள்ளிரவு. துஞ்சுதல் - தூங்குதல். உசாவுதல் - வினவுதல். நெட்டிரா - நீண்ட இரவு.
தலைவன் பொருள் தேடிப் போயிருக்க, அவனது பிரிவை எண்ணி, தலைவி வருந்திச் சொன்னது.
வாழத் தகுதியற்றது
இந்தக் கடற்கரைச் சிற்றூர்.
சோலைகள் சூழ்ந்த நெய்தல் நிலத்துத் தலைவன் தந்த
பிரிவுத் துன்பத்தை எண்ணி,
அடங்காத துயரத்தோடு
நள்ளிரவில் துயிலாமல் இருப்பவரை,
விசாரித்து ஆறுதல் கூறாமல்
தூங்கிக் கொண்டிருக்கும் மக்களையும்,
நீண்ட இரவையும் உடையது.
குறுந்தொகை 144 - சென்றனள் மாதோ
பாலை - செவிலித்தாய் கூற்று
கழிய காவி குற்றும் கடல
வெண் தலைப் புணரி ஆடியும் நன்றே
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர
இவ் வழிப் படுதலும் ஒல்லாள் அவ்வழிப்
பரல் பாழ் படுப்பச் சென்றனள் மாதோ
செல் மழை தவழும் சென்னி
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே.
-மதுரை ஆசிரியன் கோடங்கொற்றனார்
கழி - உப்பங்கழி. காவி - செங்கழுநீர்ப் பூ. குற்றுதல் - பறித்தல். புணரி - அலை. ஆயம் - தோழியர்க் கூட்டம். அயர்தல் - விளையாடுதல். ஒல்லுதல் - உடன்படுதல். பரல் - கூழாங்கல். சென்னி - உச்சி. பிறங்கல் - பாறை. விலங்கு - அமைதல்.
திருமணத்திற்குப் பெற்றோர் சம்மதிக்காததால், தலைவனுடன் உடன்போய்விட்ட தலைவியை எண்ணி, செவிலித்தாய் வருந்திச் சொன்னது.
உப்பங்கழியில் செங்கழுநீர்ப் பூக்கள் பறித்தும்
கடலில் வெண்நுரை அலைகளில் குளித்தும்
விட்டுப்பிரியாத தோழிகளோடு
விளையாடிக் கொண்டும்
இங்கே இருக்க ஒப்பவில்லை.
கூழாங்கற்கள் கால்களை வருத்தும்
பாலை நிலத்து வழியே சென்று விட்டாள்.
மேகங்கள் தவழும் சிகரங்களும்
விண்தொடும் பாறைகளும் விளங்கும்
மலை நாட்டுக்கு.
குறுந்தொகை 143 - நில்லாமையே நிலையிற்று
குறிஞ்சி - தோழி கூற்று
அழியல் ஆயிழை அன்பு பெரிது உடையன்
பழியும் அஞ்சும் பய மலை நாடன்
நில்லாமையே நிலையிற்று ஆகலின்
நல் இசை வேட்ட நயனுடை நெஞ்சின்
கடப்பாட்டாளனுடைப் பொருள் போலத்
தங்குதற்கு உரியது அன்று நின்
அம் கலுழ் மேனிப் பாஅய பசப்பே.
-மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
அழியல் - வருந்தாதே. ஆய் - அழகிய. இழை - அணிகலன். இசை - புகழ். நயன் - இரக்கம். கடப்பாடு - கடமை. கலுழ் - நிரம்பிய. பசப்பு - பசலை.
தலைவன் பொருள் தேடிச் சென்றிருக்க, அவன் பிரிவை எண்ணி வருந்தி இருந்த தலைவிக்கு, விரைவில் திரும்பி வருவான் என்று தோழி ஆறுதல் சொன்னது.
வருந்தாதே!
அழகிய அணிகலன்கள் அணிந்தவளே!
அன்பு நிறைந்தவன்.
பழிக்கு அஞ்சுபவன்.
பயன்தரும் மலைகள் சூழ்ந்த நாட்டினைச் சேர்ந்தவன்.
நில்லாமை ஒன்றே நிலையானது
என்பதை உணர்ந்து,
நிலைத்து நிற்கும் நற்புகழை விரும்பும்
இரக்கம் நிறைந்த நெஞ்சத்து
வள்ளலின் செல்வம் போல,
உன்னிடம் தங்காது.
உன் அழகு மேனியில் படர்ந்த பசலை.
பசப்பு - பசலை. பிரிவுத் துயரால், மேனிநிறம் வெளிறுதல்.
குறுந்தொகை 137 - இரவலர் வாரா வைகல்
பாலை - தலைவன் கூற்று
மெல் இயல் அரிவை நின் நல் அகம் புலம்ப
நிற் துறந்து அமைகுவென் ஆயின் எற் துறந்து
இரவலர் வாரா வைகல்
பல ஆகுக யான் செலவுறு தகவே.
-பாலை பாடிய பெருங்கடுங்கோ
அகம் - நெஞ்சம். புலம்பு - துன்பம். இரவலர் - யாசிப்பவர். வைகல் – நாள். செலவு - பிரிவு. தகவு - தன்மை.
தலைவன் தன்னைத் திருமணம் செய்யாமல், பிரிந்து சென்று விடுவானோ என்று அஞ்சிய தலைவிக்கு, தலைவன் சொன்னது.
மெல்லியல்பு கொண்ட பெண்ணே!
உன் நல்ல உள்ளம் வருந்தும்படி
உன்னைத் துறந்து இருப்பேனாகில்,
என்னைத் துறந்து
இரவலர் வராத நாட்கள்
பல ஆகட்டும்
உன்னைப் பிரிந்த
வினையின் விளைவால்.
இரவலர் – யாசிப்பவர் வாராது போனால், ஈகை (தானம்) என்ற அறச்செயலை செய்ய முடியாது போகும்.
குறுந்தொகை 131 - பேரமர்க் கண்ணி
பாலை - தலைவன் கூற்று
ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோள்
பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே
நெடுஞ் சேண் ஆர் இடையதுவே நெஞ்சே
ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து
ஓர் ஏர் உழவன் போலப்
பெரு விதுப்பு உற்றன்றால் நோகோ யானே
-ஓரேருழுவனார்
ஆடுதல் – அசைதல். அமை - மூங்கில். பணை - பருத்த. அமர் - போர். சேண் - தொலைவு. செவ்வி - தகுந்த காலம். புனம் - வயல். விதுப்பு - விரைவு.
பொருள் தேடிச் சென்ற தலைவன், திரும்பி வரும் வழியில், தலைவியின் ஊர் இன்னும் நெடுந்தொலைவு இருப்பதை எண்ணி, தன் நெஞ்சுக்குச் சொன்னது.
அசையும் மூங்கில் போன்ற அழகிய தோள்களும்
(பார்ப்போர் நெஞ்சோடு)
போர் செய்யும் கண்களும் கொண்டவள்.
அவள் இருக்கும் ஊர் இன்னும் நெடுந்தொலைவு.
நெஞ்சே!
மழையில் நனைந்து,
உழுவதற்குத் தயாராய் உள்ள பச்சை வயலை
(காலம் தப்பும் முன், உழுது முடிக்க அவசரம் காட்டும்)
ஒற்றை ஏர் கொண்ட உழவன் போல,
ஊர் சென்றுசேர அவசரப் படுகிறாய்!
அதை எண்ணி வருந்துகிறேன்.
ஓர் ஏர் உழவன் - பல ஏர்களும், பணியாளர்களும் இல்லாத, ஒற்றை ஏர் கொண்ட தனி உழவன், மழையில் நனைந்த வயலை, காலம் தப்பும் முன், உழுது முடிக்கக் காட்டும் அவசரம் இங்கு உவமை.
குறுந்தொகை 129 - கதுப்பயல் விளங்கும் சிறுநுதல்
குறிஞ்சி - தலைவன் கூற்று
எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப
புலவர் தோழ கேளாய் அத்தை
மாக்கடல் நடுவண் எண்ணாள் பக்கத்துப்
பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக்
கதுப்பு அயல் விளங்கும் சிறுநுதல்
புதுக்கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே.
-கோப்பெருஞ்சோழன்
எலுவன் - தோழன். சிறாஅர் - இளைஞர். ஏமம் - பாதுகாவல். அத்தை - அசைச்சொல். மா - கருமை. எண்ணாள் பக்கம் – எட்டாம் பிறை. பசுமை - இளமை. கதுப்பு - கூந்தல். நுதல் - நெற்றி.
தலைவியை நினைந்து மயங்கிய சிந்தனையில் இருந்த தலைவனிடம், அதற்கான காரணத்தைக் கேட்ட தோழனுக்கு, தலைவன் சொன்னது.
இளைஞர்களுக்கு ஆதரவு நல்கும் நண்பனே!
புலவர்கள் தோழனே! கேளாய்.
கரிய கடல் நடுவே இளவெண் எட்டாம் பிறை
தோன்றியதைப் போல
அவள் கூந்தலிடையே விளங்கும் பிறை நெற்றி,
புதிதாய் பிடிபட்ட காட்டுயானையைப் போல
என்னைக் கட்டிப் போட்டது.
உவமை - கூந்தலுக்கு கடலும், நெற்றிக்கு பிறையும் உவமை. எண்ணாள் - எட்டாம் நாள் பிறை. அஷ்டமி.
குறுந்தொகை 128 - திண்தேர்ப் பொறையன் தொண்டி
குணக்கடல் திரையது பறை தபு நாரை
திண்தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை
அயிரை ஆர் இரைக்கு அணவந்தாங்குச்
சேயள் அரியோள் படர்தி
நோயை நெஞ்சே நோய்ப் பாலோயே.
-பரணர்
குணதிசை - கிழக்கு. திரை - அலை. பறை - சிறகு. தபு - இழந்த. பொறையன் - சேரன். அயிரை - ஒரு மீன். அணவந்தல் - தலை நிமிர்ந்து பார்த்தல். சேய் – தொலைவு. படர் – துன்பம்.
தான் விரும்பிய தலைவி, தனக்குக் கிடைக்க மாட்டாள் என்று எண்ணிய தலைவன் வருந்திச் சொன்னது.
கீழ்த்திசைக் கடற்கரையில்
சிறகொடிந்து கிடக்கும் நாரை,
வலிமையான தேர்கொண்ட சேரனுடைய
மேல்திசை தொண்டி கடற்கரையில் கிடைக்கும்
அயிரை மீனுக்கு ஆசைப்பட்டு
அண்ணாந்து பார்ப்பது போல,
நெடுந்தொலைவில் உள்ள
கிடைத்தற்கு அரியவளை நினைந்து
நோயுற்று வருந்துகிறாயே, நெஞ்சே!
தொண்டி - சேரர்களின் துறைமுகப் பட்டினம். தற்போதைய கேரளக் கடற்கரை.
குறுந்தொகை 124 - தமியோர்க்கு மனை
பாலை - தோழி கூற்று
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின் அகன்தலை
ஊர் பாழ்த்தன்ன ஓமையம் பெருங்காடு
இன்னா என்றிர் ஆயின்
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே.
-பாலை பாடிய பெருங்கடுங்கோ
உமணர் - உப்பு வணிகர். மருங்கு - பக்கம். அகன்தலை - அகன்ற இடம். ஓமை - பாலை நிலத்தில் வளரும் ஒருவகை மரம். தமியோர் - தனித்திருப்போர்.
பொருள் தேடிச் செல்ல முற்பட்ட தலைவன், செல்லும் வழியின் கொடுமையைக் காரணம் காட்டி, தலைவியை உடன் அழைத்துப் போக மறுத்த போது, தோழி சொன்னது.
உப்பு வணிகர் கூடிக் கடந்த இடம்
பாழான ஊர் போலத் தோன்றும்.
அது போன்ற
ஓமை மரக்காடுகள் நிறைந்த
பாழ்பட்ட பாலை நில வழி
கொடியது என்கிறீர்.
இனிமையானதோ, தலைவனே!
தனிமையில் இருப்பவர்க்கு வீடு.
குறுந்தொகை 123 - என்னையர் திமில்
நெய்தல் - தோழி கூற்று
இருள் திணிந்தன்ன ஈர்ந் தண் கொழு நிழல்
நிலவுக் குவித்தன்ன வெண்மணல் ஒரு சிறைக்
கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப
இன்னும் வாரார் வரூஉம்
பன்மீன் வேட்டத்து என்னையர் திமிலே.
-ஐயூர் முடவனார்
திணிந்த - செறிந்த. ஈர் - ஈரமான. தண் - குளிர்ச்சி. சிறை - பக்கம். கோடு - கிளை. புலம்பு - தனிமை. என்னையர் - என் + ஐயர் - என் தமையன்மார். திமில் - படகு.
கடற்கரையில் சந்திக்கக் குறிந்திருந்த இடத்தில், தலைவனுக்காகக் காத்திருந்து, அவன் வரத் தாமதம் ஆனபோது, தோழி சொன்னது.
இருள் செறிந்த ஈரமான, குளிர் நிழல்.
நிலவைக் குவித்தது போன்ற வெண்மணல் கடற்கரை.
கருங்கிளைப் புன்னை மரச்சோலை.
அங்கு ஒரு மூலையில்
தனிமையில் காத்திருக்கிறோம்.
இன்னும் வாரார் தலைவர்.
வந்துவிடும்,
பலவகை மீன்களை வேட்டையாடச் சென்ற
நம் தமையன்மார்களின் படகு.
குறுந்தொகை 117 - சிறியவும் உள கைவளை
நெய்தல் - தோழி கூற்று
மாரி ஆம்பல் அன்ன கொக்கின்
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு
கண்டல் வேர் அளைச் செலீஇயர் அண்டர்
கயிறு அரி எருத்தின் கதழும் துறைவன்
வாராது அமையினும் அமைக
சிறியவும் உள ஈண்டு விலைஞர் கைவளையே
-குன்றியனார்.
மாரி - மழை. பார்வல் - பார்த்தல். பருவரல் - துன்பம். ஈர் - ஈரமான. ஞெண்டு - நண்டு. கண்டல் – தாழை மரம். அளை - வளை. அண்டர் - இடையர். எருத்து - எருது. கதழுதல் - விரைதல். துறைவன் - நெய்தல் தலைவன். ஈண்டு – இங்கு. விலைஞர் - விற்பவர்.
தலைவன் திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்திய போது, வருந்தியிருந்த தலைவியின் மெலிந்த நிலையைக் கண்டு, தோழி ஆறுதல் சொன்னது.
மழைக்கால ஆம்பல் போன்ற தோற்றமுடைய கொக்கு.
அதன் பார்வைக்கு அஞ்சித் துன்புற்ற ஈர நண்டு
தாழைமர வேரின் அடியில் அமைந்த தன் வளைக்கு,
இடையர் கட்டிய கயிற்றை அறுத்த எருது போல,
வேகமாக ஓடும் கடற்கரை.
அத்தகு கடற்கரை நிலத்துத் தலைவன்
உன்னிடம் வராமல் போனாலும் போகட்டும்.
சிறியவும் உள்ளன
இங்கே விற்பவர்களிடம் கைவளையல்கள்.
Wednesday, May 10, 2023
குறுந்தொகை 116 - வளங்கெழு சோழர் உறந்தை
குறிஞ்சி - தலைவன் கூற்று
யான் நயந்து உறைவோள் தேம்பாய் கூந்தல்
வளங்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை
நுண்மணல் அறல் வார்ந்தன்ன
நன்னெறி யவ்வே நறுந் தண்ணியவே.
-இளங்கீரனார்
தேம் - இனிய. பாய் - தவழும். துறை – நீர்த்துறை. அறல் - கருமணல். வாரல் - நீளுதல். நெறிப்பு - மணல் சுவடு. நறுமை - மணம். தண்மை – குளிர்ச்சி.
என்னால் விரும்பப்பட்டு, என்னுடன் பழகும்
இப்பெண்ணின் தவழும் கூந்தல்,
வளம்மிக்க சோழர்தம் உறந்தை நகரத்து
ஆற்றங்கரையின் நுண்ணிய கருமணலை
வார்த்ததைப் போன்று
அலையலையாய்ப் படர்ந்தது.
மணம் மிக்கது.
குளிர்ச்சியானது.
உறந்தை – உறையூர். சோழர் தலைநகர். ஆறு – காவிரி.
குறுந்தொகை 115 - நின் அலது இலளே
குறிஞ்சி - தோழி கூற்று
பெரு நன்று ஆற்றின் பேணாரும் உளரே
ஒருநன்று உடையள் ஆயினும் புரி மாண்டு
புலவி தீர அளிமதி இலை கவர்பு
ஆடு அமை ஒழுகிய தண் நறுஞ் சாரல்
மென்னடை மரையா துஞ்சும்
நன்மலை நாட நின் அலது இலளே.
-கபிலர்
நன்று - நன்மை. பேணுதல் - போற்றுதல். புரி - விருப்பம். மாண் - மாட்சிமை. புலவி - ஊடல். அளி - அருள். கவர்பு - கவர்ந்து. ஆடுதல் - அசைதல். அமை - மூங்கில். ஒழுகுதல் - நீளுதல். மரையா - மான். துஞ்சும் - தூங்கும்.
திருமணத்திற்கு பெற்றோர் ஒப்பாததால், தலைவனும், தலைவியும் உடன்போகத் தயாரானபோது, தலைவனுக்குத் தோழி அறிவுறுத்தியது.
பெரும் நன்மைகள் செய்தோரை
போற்றாதார் யாரும் உளரோ!
ஒரு நன்மை உடையவள் ஆயினும்,
இவள் மீது விருப்பம் கொள்.
மாட்சிமையோடு, வெறுப்பின்றி அருள் செய்.
இலைகளைக் கவர்ந்து உண்டு
அசையும் மூங்கில்கள் நெடிது வளர்ந்த
குளிர்ந்த, நறுமணம் வீசும் மலைச் சாரலில்
மென்நடை மான்கள் தூங்குகின்ற
மலை நாட்டுத் தலைவனே!
நின்னையன்றி
வேறு துணை இல்லாதவள்.
குறுந்தொகை 114 - என் மகள் நுதல்
நெய்தல் - தோழி கூற்று
நெய்தற் பரப்பில் பாவை கிடப்பி
நின் குறி வந்தனென் இயல் தேர்க் கொண்க
செல்கம் செலவியங் கொண்மோ அல்கலும்
ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும் என்மகள் நுதலே.
-பொன்னாகனார்
பாவை - பொம்மை. குறி - குறித்த இடம். கொண்கன் - நெய்தல் நிலத் தலைவன். அல்கல் - இரவு. ஆரல் - ஒரு வகை மீன். நுதல் - நெற்றி.
தலைவனும் தலைவியும் சந்திப்பதற்காகக் குறித்திருந்த இடத்தில், தலைவியை விட்டு விட்டு வந்த தோழி, தலைவனுக்குச் சொன்னது.
கடற்கரை மணற்பரப்பில்
பாவையைக் கிடத்தி விட்டு
நின்னிடம் வந்துள்ளேன்.
நன்கு செய்யப்பட்ட தேரையுடைய
நெய்தல் நிலத் தலைவனே!
அங்கு செல்கின்றேன்.
தலைவியை அனுப்பி வை.
இரவு வந்தால்
ஆரல் மீன்களை வயிறு நிறைய உண்ட
நாரை மிதித்து விடும்.
என் மகள் நெற்றியை.
பாவை - கோரைப் புல், பஞ்சு, பூக்கள் ஆகியவற்றைக் கொண்டு செய்த பொம்மை. இவற்றை இளம் பெண்கள் தம் மகள்களாக எண்ணி விளையாடுவர் என்பது மரபு.
குறுந்தொகை 113 - சிறு கான் ஆறு
மருதம் - தோழி கூற்று
ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே சிறு கான் ஆறே
இரைதேர் வெண் குருகு அல்லது யாவதும்
துன்னல் போகின்றால் பொழிலே யாம் எம்
கூழைக்கு எருமண் கொணர்கம் சேறும்
ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே.
-மாதீர்த்தனார்
அணித்து - அருகில். பொய்கை - நீர்நிலை. சேய்மை - தூரம். கான் - காடு. குருகு - நாரை. துன்னல் - நெருங்குதல். கூழை - கூந்தல்.
தலைவியைச் சந்திக்கத் தோதான இடத்தைக் குறிப்பிட்டு, தலைவனுக்குத் தோழி சொன்னது.
ஊர்க்கு அருகில் நீர்நிலை.
நீர்நிலைக்கு அருகில் சிறிய காட்டாறு.
இரைதேடும் வெண் நாரையைத் தவிர
எதுவும் நெருங்காத சோலை.
நாங்கள் எம் கூந்தலுக்கு எருமண் எடுக்க வருவோம்.
எம்முடன் அங்கு வருவாள் தலைவி.
எருமண் - ஆற்றங்கரை மண். பெண்கள் கூந்தலைச் சுத்தப்படுத்தப் பயன்படுத்துவர்.
குறுந்தொகை 112 - நாருடை ஒசியல்
குறிஞ்சி - தலைவி கூற்று
கௌவை அஞ்சின் காமம் எய்க்கும்
எள் அற விடினே உள்ளது நாணே
பெருங்களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நாருடை ஒசியல் அற்றே
கண்டிசின் தோழி அவர் உண்ட என் நலனே.
-ஆலத்தூர் கிழார்
கௌவை - பழிச்சொல். எய்த்தல் - குறைதல். எள் - இகழ்ச்சி. களிறு - யானை. ஒசியல் - ஒடிந்த கிளை.
திருமணம் செய்யாமல் தலைவன் காலம் கடத்தியபோது, தலைவி சொன்னது.
ஊராரின் பழிச்சொல்லுக்கு அஞ்சி
(அவனை நினையாமல் இருந்தால்)
காதல் குறையும்.
பழிச்சொல் முழுதும் அழியும்படி
காதலைக் கைவிட்டால்
மிஞ்சப் போவது நாணம் மட்டுமே.
யானை வளைத்ததால் முறிந்து,
(மரத்திலும் இல்லாமல்)
நிலத்திலும் விழாமல்,
நாருடன் தொங்கிக் கொண்டிருக்கும்
ஒடிந்த மரக்கிளை போன்று உள்ளது.
காண்பாய் தோழி!
அவர் துய்த்த
என் பெண்மை நலன்.
குறுந்தொகை 101 - தோள் மாறுபடூஉம் வைகல்
குறிஞ்சி - தலைவன் கூற்று
