Saturday, May 6, 2023

குறுந்தொகை 44 - இவ்வுலகத்துப் பிறரே

பாலை - செவிலித்தாய் கூற்று

காலே பரி தப்பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே
அகல் இரு விசும்பின் மீனினும்
பலரே மன்ற இவ் உலகத்துப் பிறரே.
 
-வெள்ளிவீதியார்
 
பரி - நடை. வாள் - ஒளி. அகல் - அகண்ட. விசும்பு - வானம். மீன் - விண்மீன். மன்ற - உறுதியாக.
 
பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தராததால், தலைவனும், தலைவியும் உடன்போகிவிட, அவர்களைத் தேடிச் சென்ற தலைவியின் செவிலித்தாய் சொன்னது.
 
நடந்து, நடந்து
கால்கள் ஓய்ந்தன.
கண்கள்
போவோர் வருவோரைப் பார்த்து பார்த்து
ஒளியிழந்தன.
அகண்ட வானத்து விண்மீன்களையும் விட
அதிகமாக உள்ளனர்.
இவ்வுலகத்தில் மற்றவர்.

No comments:

Post a Comment