பாலை - தலைவன் கூற்று
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் எனச்
செய்வினை கைம்மிக எண்ணுதி அவ் வினைக்கு
அம் மா அரிவையும் வருமோ
எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே.
-உகாய்க்குடி கிழார்
கைம்மிக - அளவுக்கதிகமாக. அம் - அழகிய. மா - மாமை நிறம். உய்த்தல்
– செலுத்துதல்.
பொருள் ஈட்டுவதற்காகச் செல்லும்போது, தலைவியைப் பிரிய வேண்டி
இருப்பதை எண்ணி, தலைவன் சொன்னது.
தானம் தருவதும், இன்பம் துய்ப்பதும்
பொருள் இல்லாதவர்க்கு இல்லை என்பதால்
செல்வம் ஈட்டும் செயல்களை அதிகம் எண்ணுகிறாய்!
பொருள் தேடிச் செல்லும் போது
அந்த அழகிய, மாமை நிறப் பெண்ணும்
உடன் வருவாளோ?
என்னை மட்டும் போகச் சொல்கிறாயோ?
சொல் மனமே.

No comments:
Post a Comment