Friday, May 26, 2023

குறுந்தொகை 182 - பெண்ணை மா மடல்

குறிஞ்சி - தலைவன் கூற்று

விழுத்தலைப் பெண்ணை விளையல் மா மடல்
மணியணி பெருந்தார் மரபிற் பூட்டி
வெள் என்பு அணிந்து பிறர் எள்ளத் தோன்றி
ஒருநாள் மருங்கில் பெருநாண் நீக்கித்
தெருவின் இயலவும் தருவது கொல்லோ
கலிழ்கவின் அசைநடைப் பேதை
மெலிந்திலள் நாம் விடற்கு அமைந்த தூதே.

-மடல் பாடிய மாதங்கீரனார்

விழு - சிறந்த. பெண்ணை - பனை. விளையல் - முதிர்ந்த. மா - குதிரை. மடல் – பனையோலை. தார் - மாலை. என்பு - எலும்பு. மருங்கு - பக்கம். நாண் - நாணம். இயலுதல் - இழுக்கப்படுதல். கலிழ்தல் - ஒழுகுதல். கவின்- அழகு. மெலிதல் - இரங்குதல்.

தன் காதலை தலைவி ஏற்காதலால், மடலேறப் போவதாக தலைவன் சொன்னது.

அழகிய உச்சியைப் பெற்ற பனை மரத்தின்
முதிர்ந்த மடலால் குதிரை செய்து,
அதற்கு மணிமாலை சூட்டி
அதன் மேல் ஏறி
வெண்ணிற எலும்பு மாலை அணிந்து
ஊரார் ஏளனம் செய்ய, வெட்கம் விட்டு
தெருவில் இழுத்துச் செல்லப்படவும் வேண்டுமோ!
அழகு மிளிரும், அசைந்த நடை கொண்ட அவள்
இரங்கவில்லையே!
நாம் விடுத்த தூதிற்கு.

மடலேறுதல் - பல விதங்களில் முயன்றும், தலைவி காதலை ஏற்காதபோது, கடைசி உபாயமாகச் சொல்லப்படுவது மடல் ஏறுதல் என்பது. பனை மடலால் செய்யப்பட்ட குதிரை பொம்மையின் மீது ஏற்றப்பட்டு,  ஊரார் நகைக்க, தலைவன் தெரு வழியே இழுத்துச்  செல்லப்படுவான். இப்படிச் செய்தால், தலைவி மனம் இறங்குவாள் என்பது மரபு.

No comments:

Post a Comment