பாலை - தலைவி கூற்று
கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவா-து
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே.
-வெள்ளிவீதியார்
ஆன் - பசு. உக்குதல் - வீணாதல். என்னை - என்+ ஐ - என் தலைவன்.
உணீஇயர் - உண்ணுதல். வேண்டும் - விரும்பும். திதலை - தேமல். அல்குல் - இடை.
தலைவனின் பிரிவால் வருந்திய தலைவி சொன்னது.
கன்றும் உண்ணாமல்
கலத்திலும் கறக்கப் படாமல்
பசுவின் பால் நிலத்தில் வழிந்து வீணாவது போல,
எனக்கும் பயனின்றி
என் தலைவனுக்கும் பயனின்றி
பசலையால் உண்ணப்பட்டுக் கிடக்கிறது.
தேமல் பரவிய
மாமை நிறத்து என் மேனி அழகு.
பசலை - பிரிவுத் துயரால் உடல் வெளிறுதல்.

No comments:
Post a Comment