Saturday, May 6, 2023

குறுந்தொகை 19 - எவ்வி இழந்த பாணர்

மருதம் - தலைவன் கூற்று

எவ்வி இழந்த வறுமை யாழ்ப் பாணர்
பூ இல் வறுந்தலை போலப் புல்லென்று
இனைமதி வாழியர் நெஞ்சே மனை மரத்து
எல்லுறு மௌவல் நாறும்
பல் இருங் கூந்தல் யாரளோ நமக்கே?
 
-பரணர்
 
வறுந்தலை - வறிய தலை. புல்லென்று - பொலிவிழந்து. இனைதல் - வருந்துதல். மனை - வீடு. எல் - ஒளி. மௌவல் - முல்லை. இரு – கரிய.
 
தலைவியைப் பிரிந்திருந்த தலைவன், மீண்டு வந்தபோது, அவள் கோபத்தோடு ஊடல் கொள்ள, அவன் வருந்திச் சொன்னது.
 
எவ்வியை இழந்து வறியரான பாணர்களின்
பூவற்ற வெறுந்தலை போல,
நீயும் பொலிவிழந்து வருந்துக நெஞ்சே!
வீட்டுத் தோட்டத்து மரத்தில் படர்ந்த
முல்லையின் ஒளிமிக்க மலர்கள் சூடி
மணம் கமழும் கருங்கூந்தல் கொண்ட இவள்
இனி நமக்கு யாரோ? என்ன உறவினளோ?
 
எவ்வி – ஒரு மன்னன், வள்ளல். பாணற்கு பொன்னாலான பூக்கள் கொடுத்தவன். இவன் போரில் இறந்தபோது, பாணர்கள் தமது யாழ்களை முறித்துப் போட்டனர்.

No comments:

Post a Comment