Wednesday, May 10, 2023

குறுந்தொகை 91 - நெடுந்தேர் அஞ்சி

மருதம் - தலைவி கூற்று

அரில் பவர்ப் பிரம்பின் வரிப்புற விளை கனி
குண்டு நீர் இலஞ்சிக் கெண்டை கதூஉம்
தண் துறை ஊரன் பெண்டினை ஆயின்
பல ஆகுக நின் நெஞ்சில் படரே
ஓவாது ஈயும் மாரி வண்கைக்
கடும் பகட்டி யானை நெடுந்தேர் அஞ்சி
கொன்முனை இரவு ஊர் போலச்
சில ஆகுக நீ துஞ்சு நாளே.
 
-ஒளவையார்
 
அரில் - பின்னிய. பவர் - கொடி. குண்டு - ஆழம். இலஞ்சி - குளம். கதூம் - கவ்வும். துறை – நீர்த்துறை. படர் - துன்பம். ஓவாது - ஒழியாது. பகடு யானை - ஆண் யானை. கொன்முனை  - அச்சம் தரும் போர்க்களம். முனை - போர்முனை. துஞ்சுதல் - தூங்குதல்.
 
பரத்தையிடம் வசித்த தலைவன், மீண்டும் தலைவியோடு சேர விரும்பிய போது, அவனைத் ஏற்க ஆசைப்பட்ட தலைவிக்கு, தோழி மறுத்துச் சொன்னது.
 
பின்னிய பிரம்புக் கொடியில் விளைந்த
புறத்தே வரிகள் கொண்ட கனிகளை
ஆழக் குளத்துக் கெண்டை மீன்கள் தாவிக் கவ்வும்
குளிர்ந்த நீர்த்துறைகள் நிறைந்த
ஊரினைச் சேர்ந்த தலைவன்.
நீ அவனது மனைவியானால்,
பல ஆகும்
உன் உள்ளத்துத் துன்பம்.
ஓயாது வாரி வழங்கும் மழை போன்ற கைகளும்
வேகமான ஆண் யானைப் படைகளும்
நெடுந்தேர்களும் கொண்ட
அதியமான் போர் புரியும் ஊரின் இரவு போல
சில ஆகும்
நீ தூங்கும் நாட்கள்.
 
அஞ்சி - கடையெழு வள்ளல்களுள் ஒருவனான அதியமான் நெடுமான் அஞ்சி.

No comments:

Post a Comment