Tuesday, May 30, 2023

குறுந்தொகை 228 - திரை வந்து பெயரும்

நெய்தல் - தலைவி கூற்று

வீழ் தாழ் தாழை ஊழ்உறு கொழு முகை
குருகு உளர் இறகின் விரிபு தோடு அவிழும்
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்
திரை வந்து பெயரும் என்ப நத்துறந்து
நெடுஞ் சேண் நாட்டார் ஆயினும்
நெஞ்சிற்கு அணியர் தண் கடல் நாட்டே.

-செய்தி வள்ளுவர் பெருஞ்சாத்தனார்

வீழ் - விழுது. தாழ் - தாழ்ந்த. தாழை - தாழை மரம். ஊழுறு - முற்றிய. முகை - மொட்டு.  குருகு - நாரை. உளர் - கோதிய. தோடு - மடல். முன்றில் - முற்றம். திரை - அலை. சேண் - தொலைவு. அணியர் - நெருங்கியவர்.

தலைவன் பொருள் தேடிப் போயிருக்க, அவன் பிரிவை எப்படித் தாங்குகிறாய் என்று கேட்ட தோழிக்கு, தலைவி சொன்னது.
 
விழுதுகள் வளர்ந்த தாழை மரம்.
அதன் முற்றிய வளமான மொட்டுகள்
நாரை தன் சிறகுகளைக் கோதுவதைப் போல
மடலாக விரிந்து மலர்கின்ற
சோலைகள் சூழ்ந்தது நம் கடற்கரைச் சிற்றூர்.
நம் வீட்டு முற்றத்திற்கு வெளியே  
கடலலைகள் கரையில் மோதி விட்டு
திரும்பிச் செல்கின்றன.
நம்மைத் துறந்து
நெடுந்தொலைவு நாட்டில் உள்ளவர் ஆயினும்
நமது நெஞ்சுக்கு நெருக்கமாகவே இருப்பவர் வசிக்கும்
அந்தக் கடற்கரை நாட்டில் இருந்து.

No comments:

Post a Comment