பாலை - கண்டோர் கூற்று
வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல் அடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார்கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறு ஆடு பறையின் கால் பொரக் கலங்கி
வாகை வெண் நெற்று ஒலிக்கும்
வேய் பயில் அழுவம் முன்னியோரே.
-பெரும்பதுமனார்
தொடி - வளையல். அளியர் - இரங்கத்தக்கவர். கால் - காற்று. பொருதல் - தாக்குதல். வாகை - பாலை
நிலத்தில் வளரும் ஒரு மரம். நெற்று - உலர்ந்த பழம். வேய் - மூங்கில். அழுவம் - நிலப்பரப்பு. முன்னுதல்
- நினைத்தல்.
திருமணத்திற்குப் பெற்றோர் ஒப்புதல் தராததால், தலைவனும், தலைவியும்
உடன்போக, அவர்களை வழியில் கண்டவர்கள் சொன்னது.
வில்பிடித்தவன் கால்களில் கழல்கள்.
வளையல் அணிந்தவள் மெல்லடி மேல் சிலம்பு.
இந்த நல்லவர்கள் யாரோ!
இரங்கத்தக்கவர்கள்.
ஆரியர்கள் கயிற்றின் மேல் ஆடும் கூத்தின் போது
இசைக்கப்படும் பறை போல,
பெருங்காற்று தாக்குவதால் அசைந்தாடும்
வாகை மரத்தின் முற்றிய காய்கள்
படபடவென ஒலிக்கும்,
மூங்கில் நிறைந்த
பாலை நிலம் நோக்கிச் செல்கின்றனர்.
சிலம்பு - சங்க காலத்தில் திருமணமாகாத பெண்கள் சிலம்பு அணிந்தனர்.
ஆரியக்கூத்து - அக்காலத்தே, வடநாட்டில் இருந்த வந்த ஆரியர்கள் மக்களை மகிழ்விக்க கழைக்கூத்து
ஆடியதாகத் தெரிகிறது.

No comments:
Post a Comment