Saturday, May 6, 2023

குறுந்தொகை 68 - மருந்து பிறிதில்லை

குறிஞ்சி - தலைவி கூற்று

பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தின்
ஊழ்ப்படு முதுகாய் உழை இனம் கவரும்
அரும்பனி அற்சிரம் தீர்க்கும்
மருந்து பிறிதில்லை அவர் மணந்த மார்பே. 
 
 -அள்ளூர் நன்முல்லையார் 
 
பூழ் - கோழி. உழுந்து - உளுந்து. ஊழ்த்தல் - முதிர்தல். உழை - மான். அற்சிரம் - முன்பனிக்காலம்.
 
பொருள் தேடிச் சென்ற தலைவன் திரும்பி வருவதாக குறித்துச் சென்ற முன்பனிக்காலம் வந்தும், அவன் இன்னும் வராததால், தலைவி வருந்திச் சொன்னது.
 
கோழிக்கால் போன்று சிவந்த அடிப்பாகத்தையுடைய
உளுந்தின் முதிர்ந்த காய்களை
மான்கள் தின்கின்ற
கடும்பனி பெய்யும் முன்பனிக்காலம் வந்தது.
தனிமை என்னும் நோயைத் தீர்க்கும்
மருந்து வேறில்லை.
என்னைத் தழுவிய
அவர் மார்பைத் தவிர.

No comments:

Post a Comment