Tuesday, May 30, 2023

குறுந்தொகை 242 – சேந்துவரல் அறியாது செம்மல் தேர்

முல்லை - செவிலித்தாய் கூற்று

கானங்கோழிக் கவர்குரல் சேவல்
ஒண்பொறி எருத்தின் தண்சிதர் உறைப்பப்
புதல் நீர் வாரும் பூ நாறு புறவில்
சீறூரோளே மடந்தை வேறு ஊர்
வேந்து விடு தொழிலோடு செலினும்
சேந்து வரல் அறியாது செம்மல் தேரே.

-குழற்றத்தானார்

கவர்த்த - கிளைத்த. ஒண் - ஓளிரும். பொறி - புள்ளி. எருத்து - கழுத்து. தண் - குளிர்ந்த. சிதர்- நீர்த்துளி.  புதல் - புதர். வாரும் - ஒழுகும். புறவு - முல்லை நிலம். சேந்து வரல் -  தங்கியிருந்து பிறகு திரும்புதல்.

திருமணமான மகள் வீட்டுக்குச் சென்று திரும்பிய செவிலித்தாய், பெற்ற அன்னைக்குச் சொல்லியது.

காட்டுக்கோழிகள் பல சேர்ந்து
ஒன்றாய் ஒலித்தது போன்ற குரலுடைய சேவல்.
அதன் ஒளிரும் புள்ளிகள் கொண்ட கழுத்தின் மேல்
குளிர்ந்த நீர்த்துளிகள் சொட்டித் தெறிக்கும்படி
புதரில் இருந்து நீர் ஒழுகும்
பூமணம் வீசும் முல்லை நிலம்.
அங்கு ஒரு சிறிய ஊரில் வாழ்கிறாள் அவள்.
அயல் ஊருக்கு
அரசனிட்ட பணியைச் செய்யச் சென்றால் கூட
இரவு தங்கி மறுநாள் வருவது
என்பதை அறியாதது
தலைவனின் தேர்.

No comments:

Post a Comment