Saturday, May 6, 2023

குறுந்தொகை 49 - நின் நெஞ்சு நேர்பவளே

நெய்தல் - தலைவி கூற்று

அணில் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து
மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை ஆயினும்
நீ ஆகியர் என் கணவனை
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே.
 
-அம்மூவனார்
 
கொங்கு - பூந்தாது. முண்டகம் - முள்ளிச்செடி. மணிக்கேழ் – மணி நிறம். மா - கருமை. சேர்ப்பன் - நெய்தல் தலைவன்.
 
அணில் பல் போன்ற முட்களும்
முதிர்ந்த பூந்தாதும் கொண்ட
முள்ளிச்செடி படர்ந்த
நீலமணி நிறக் கடல் சூழ்
நெய்தல் நிலத்துத் தலைவனே!
இப்பிறவி போய் மறுபிறவி உண்டாயினும்
நீயே என் கணவன்.
நானே நின் நெஞ்சுக்கு ஏற்றவள்.

No comments:

Post a Comment