Friday, May 5, 2023

குறுந்தொகை 11 - குல்லைக் கண்ணி வடுகர்

பாலை - தலைவி கூற்று

கோடு ஈர் இலங்கு வளை ஞெகிழ நாள்தொறும்
பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் ஆங்கே
எழு இனி வாழி என் நெஞ்சே முனாஅது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல் வேல் கட்டி நல் நாட்டு உம்பர்
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே.

-மாமூலனார்

கோடு - சங்கு. ஈர்தல் - அறுத்தல். பாடுதல் - பொருந்துதல். கலிழ்தல் - அழுதல். புலம்பு - தனிமை. உய்தல் - தப்பித்தல். முனாது - முன்னே. குல்லை - துளசி. கண்ணி – மாலை. உம்பர் - அப்பால். மொழிபெயர் தேயம் - வேற்று மொழித் தேசம். வழிபடல் - செல்லுதல். சூழ்ந்திசின் - எண்ணினேன்.

தலைவன் பொருள் தேடி வேற்று நாட்டுக்குச் சென்றிருக்க, அவன் பிரிவைத் தாங்க மாட்டாத தலைவி சொன்னது.

சங்கினை அறுத்துச் செய்யப்பட்ட வளையல்கள் நெகிழ,
நாள்தோறும்
தூக்கமற்றுக் கலங்கியழும் கண்களோடு
தனிமையில் இங்கு இருப்பதை விட்டு
விடுதலை அடைவோம்.
அங்கு செல்ல எழுவாய் நெஞ்சே!
துளசி மாலை அணிந்த
தெலுங்கர்கள் பிரதேசத்திடை அமைந்த அந்நாட்டிற்கு,
வலிமையான வேல்படை கொண்ட
கட்டி மன்னனின் நாட்டைக் கடந்து செல்வோம்.
வேற்று மொழி தேசமாயினும்,சென்று விடுவோம்.
அவர் வசிக்கும் நாடு.

வடுகர் - வேங்கடத்திற்கு அப்பால் வசிக்கும் தெலுங்கர். கட்டி - சேரர்களின் தளபதி, கங்க நாட்டு மன்னன். அந்நாடு தமிழ், வடுக நாடுகளுக்கிடையே இருந்திருக்கலாம்.

No comments:

Post a Comment