Thursday, June 1, 2023

குறுந்தொகை 283 - நெடு மூதிடைய நீரில் ஆறு

பாலை - தலைவி கூற்று

உள்ளது சிதைப்போர் உளர் எனப் படாஅர்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு எனச்
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச்
சென்றனர் வாழி தோழி என்றும்
கூற்றத்தன்ன கொலை வேல் மறவர்
ஆற்று இருந்து அல்கி வழங்குநர்ச் செகுத்த
படு முடைப் பருந்து பார்த்திருக்கும்
நெடு மூது இடைய நீர் இல் ஆறே.

-பாலை பாடிய பெருங்கடுங்கோ

இரவு - யாசகம். இளிவு - இழிவு. கூற்றம் - எமன். ஆறு – பாதை. அல்கி - தங்கி. வழங்குநர் - வழிப்போக்கர். செகுத்தல் - கொல்லுதல். முடை - புலால். மூது - முதிய.

தலைவன் பொருள் தேடிப் பிரிந்து சென்றிருக்க, அவன் சென்ற பாலை நிலப் பாதையின் கொடுமையை எண்ணி, தலைவி சொன்னது.

தம் முன்னோர் விட்டுச் சென்ற செல்வத்தைச்
சிதைத்து வாழ்வோர், செல்வந்தர் எனப்படார்.
தாமே முயன்று ஈட்டிய பொருள்
இல்லாதார் வாழ்க்கை, இரத்தலை விட இழிவானது.
என்று மனவலிமையோடு சொல்லிச் சென்றார், தோழி!
எமனைப் போன்ற, கொலை வேல் பிடித்த கொள்ளையர்
பாதையில் மறைந்திருந்து
வழிப்போக்கரை மாய்ப்பதால் கிடைக்கும்
புலாலுக்காகப் பருந்துகள் காத்திருக்கும்
தொன்மையான நீரற்ற பாலைநிலத்து வழியே.

No comments:

Post a Comment