தாமரை புரையும் காமர் சேவடிப்
பவழத்து அன்ன மேனித் திகழ் ஒளிக்
குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சு பக எறிந்த வஞ்சுடர் நெடுவேல்
சேவல் அம் கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே.
-பாரதம் பாடிய பெருந்தேவனார்
புரையும் – போல. காமர் - அழகிய. குன்றி - குன்றிமணி. உடுக்கை
- உடை. குன்று - கிரௌஞ்ச மலை. ஏமம் - மகிழ்ச்சி. வைகல் - நாள்.
தாமரை போன்ற
அழகிய, செம்மையான திருவடிகள்.
பவழம் போன்று சிவந்த மேனி.
திகழும் ஒளி.
குன்றிமணி போன்று சிவந்த ஆடை.
கிரௌஞ்சமலை நடுவில் பிளக்கும்படி எறியப்பட்ட
ஒளிரும் நெடு வேல்.
இவற்றைக் கொண்ட
சேவல் கொடி ஏந்திய முருகன் காப்பதால்
மகிழ்வான நாட்களை அடைகின்றன,
இவ்வுலக உயிர்கள்.
கிரௌஞ்சன் - ஒரு அசுரன். மலை உருவத்தில் இருந்த இவனை முருகப்
பெருமான் வதம் செய்தார்.

No comments:
Post a Comment